வெஸ்ட் பாம் பீச்: ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் உள்ள பகுதிகளை குறிவைத்து அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்த சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தும் வரை தங்களது தரப்பு தாக்குதல் தொடரும் என்றும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது, ''சனிக்கிழமை மாலை தலைநகர் சனாவிலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவுதி அரேபியாவின் எல்லையில் அமைந்துள்ள கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாடாவிலும் வான்வழித் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், சனாவில் 21 பேர் கொல்லப்பட்டனர். சனாவில் 9 பேர் மற்றும் சாதாவில் 15 பேர் என 24 பேர் காயமடைந்தனர் என்று ஹவுதிகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப்பதிவில், ''அமெரிக்காவின் கப்பல் மற்றும் வான்வழி போக்குவரத்து, கடற்படை சொத்துகளை பாதுகாக்கவும், சர்வதேச கடல் வழி போக்குவரத்து சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், பயங்கரவாதிகளின் தளங்கள், பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை இலக்காக கொண்டு நமது தேசத்தின் துணிச்சல் மிக்க போர் வீரர்கள் தற்போது வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்," என்று பதிவிட்டுள்ளார்.
CENTCOM Forces Launch Large Scale Operation Against Iran-Backed Houthis in Yemen
— U.S. Central Command (@CENTCOM) March 15, 2025
On March 15, U.S. Central Command initiated a series of operations consisting of precision strikes against Iran-backed Houthi targets across Yemen to defend American interests, deter enemies, and… pic.twitter.com/u5yx8WneoG
மேலும் அவரது பதிவில், “ஹவுதி படையினர் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது தீவிர தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். முந்தைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு கொடுத்த பதிலடி பலவீனமானதாக இருந்தது. செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
CENTCOM operations against Iran-backed Houthis continue... pic.twitter.com/DYvc3gREN8
— U.S. Central Command (@CENTCOM) March 15, 2025
கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் ஏவுகணை மூலம் நமது விமானங்களை தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், நமது படைகள் மற்றும் நட்பு நாடுகளின் படைகள் மீதும் அவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்துக்கு பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் உயிரும் பறிபோய் இருக்கிறது.
அமெரிக்க கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிராக நமது தாக்குதல் தொடரும். வணிகம் சார்ந்து உலகின் முக்கிய நீர் வழிப்பாதையில் தாக்குதலை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உலக நாடுகளின் நீர்வழிப் போக்குவரத்தை எந்த தீவிரவாத சக்தியும் இனிமேல் தடுக்க முடியாது.
இதையும் படிங்க: ''பாலிடெக்னிக் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு'' - உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!
நான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களது செயல்பாடுகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும். ஹவுதி கிளர்ச்சி குழுவை ஆதரிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அமெரிக்க படைகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் படையினர் வெளியிட்ட அறிக்கையில், ''எங்களது ஏமன் ஆயுதப் படைகள் பதிலடி கொடுக்க முழுமையாக தயாராக உள்ளன.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, ''ஹவுதி இலக்குகள் மீதான வான்வழித் தாக்குதல்களின் ஆரம்பம் இது. மேலும் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.'' என அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஏமன் ஆயுதப் படை இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.