வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள 'வால்டர் ரீட்' தேசிய ராணுவ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்படவுள்ளார். இதுவரை டிரம்ப்பின் உடல்நிலை தொடர்பான அனைத்து விஷயங்களும் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அவரது மெடிக்கல் ரிப்போர்ட்டை அமெரிக்க மக்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முலே தமது அதிரடியாக நடவடிக்கைகள் மூலம் உலக நாடுகளை அதிர வைத்து வருகிறார் டிரம்ப். அவர் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பல நாடுகளை கதிகலங்கச் செய்து வருகின்றது.
இது ஒருபுறம் இருக்க, டிரம்ப் இன்று முழுமையான மருத்துவப் பரிசோதனைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் மருத்துவப் பரிசோதனை இதுவாகும்.
இதையும் படிங்க: பின்வாங்கிய டிரம்ப்: சீனா தவிர பிற நாடுகளுக்கு பழைய 10% வரி தான்!
அமெரிக்காவை பொறுத்தவரை அதிபராக பதவி வகிப்பவர் யாராக இருந்தாலும், அவர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். தங்கள் அதிபர் எத்தகைய உடல்நலத்துடன் இருக்கிறார் என்பதை, நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும்.
ஆனால், இதிலும் டிரம்ப் மட்டுமே விதிவிலக்காக இருந்து வந்திருக்கிறார். கடந்த 2017 - 21 இல் அவர் அதிபராக இருந்த சமயத்தில், அவரது மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், அவரது மெடிக்கல் ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியானதில்லை.
அதே சமயத்தில், கடந்த முறை அதிபராக இருந்த ஜோ பைடனின் உடல்நிலை குறித்தும், அவரது மருத்துவ அறிக்கைகள் தொடர்பாகவும் மிகக் கடுமையான விமர்சனத்தை டிரம்ப் முன்வைத்து வந்தது பலரயைும் முகம் சுளிக்கச் செய்தது. இந்த சூழலில்தான் தற்போது மிக வயதான (78) அமெரிக்க அதிபராக கருதப்படும் டிரம்ப்பின் மெடிக்கல் ரிப்போர்ட்டை அமெரிக்க மக்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
முன்னதாக, டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 'இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உணர்கிறேன். ஆனாலும், இந்த விஷயங்களை (மருத்துவப் பரிசோதனைகள்) செய்ய வேண்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.