வாஷிங்டன்: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு டிரம்ப் அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது, வழக்கு முடியும் வரை வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைத் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நீதிபதி அலிசன் பரோஸ் (Allison Burroughs) பிறப்பித்தார். இதற்கிடையே, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், பல்கலைக்கழகத்திற்கு 30 நாள்கள் அவகாசம் அளித்து கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ஹார்வர்டு பல்கலைகக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அரசு தடை மற்றும் கட்டுபாடுகள் விதித்தது தொடர்பாக, கல்லூரி நிர்வாகம் தங்களின் கருத்தை தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்நாட்டு எதிர்ப்பு, பயங்கரவாத ஆதரவு, யூத மாணவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றால் ஹார்வர்டு வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கியுள்ளது என்று கூறி, அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தங்கள் கட்டுப்பாடுகளுக்கு இணங்க பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தியது.
மேலும், ஹார்வர்டு நிர்வாகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், 2024-ஆம் ஆண்டு வரை சீன துணை ராணுவக் குழுவின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் குற்றஞ்சாட்டியது. மேலும், பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் சுமார் ரூ.18,000 கோடி மானியத்தையும் நிறுத்தி வைத்தது டிரம்ப் அரசு.
இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஒரு பேனா முனையால் தங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எண்ணிக்கையில் கால் பகுதியை காலி செய்ய அரசு முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க |
இந்தியா உள்பட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,800 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வரும் நிலையில், பாதுகாப்புத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு, ஹார்வர்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை நிலைகுலைய செய்தது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பு அவர்களின் கல்விக் கனவை கேள்விக்குறியாக்கியது.
இதனை எதிர்த்து, ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. தற்போது அதை மீண்டும் நீட்டித்து, வழக்கு முடியும் வரை வெளிநாட்டு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் தற்போது சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.