நியூயார்க்: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணா, அமெரிக்காவில் இருந்து விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை போலீசார், அதிரடி கமாண்டோ படையினர் ஆகியோர் சுட்டுக் கொன்றனர். தாக்குதலுக்காக சதித் திட்டம் தீட்டியதாக தஹாவ்வூர் ராணா மீது இந்தியா சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார். எனவே அவரை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டரீதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர் ராணா. பாகிஸ்தான்-அமெரிக்க தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடைய நபராவார். இருவரும் சேர்ந்து தான் கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது, கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும். அவர் இந்தியாவில் உள்ள வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து தகவல் அளித்துள்ள இந்திய அதிகாரிகள், இந்தியாவை சேர்ந்த பன்முக விசாரணை முகமைகளின் அதிகாரிகள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை அவர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்பித்துள்ளனர். எனவே மிக விரைவில் ராணா நாடுகடத்தப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:"பின் வாங்கமாட்டேன்....!" பரஸ்பர வரி விதிப்பு குறித்து டிரம்ப் திட்டவட்டம்! -
தஹாவ்வூர் ராணா இப்போது லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் சிறையில் உள்ளார். அவர் அவசரகால விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சிறைவாசத்தின் சட்டப்பூர்வத்தன்மையை மறுபரிசீலனை செய்யகோரிய மனுவுக்கு தடை விதிக்கும்படி கேட்டிருந்தார். ஆனால், ராணாவின் இந்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
ராணா தாக்கல் செய்திருந்த மனுவில், இந்தியாவுக்கு நாடு கடத்துவது என்பது அமெரிக்க சட்டம் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான ஐநா மாநாட்டுக்கு எதிரானது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும்பட்சத்தில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறியிருந்தார். மும்பை தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்ற முறையிலும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியர் என்ற வகையிலும் தமக்கு எதிராக துன்புறுத்தல் நிகழலாம் என்றும் கூறியிருந்தார். மேலும் தமக்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருப்பதாகவும், எனவே தம்மை நாடு கடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய-அமெரிக்க அட்டர்னியான ரவி பாத்ரா, "நாடு கடத்தப்படுவதை தடுக்கும் விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் ராணா தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதற்கு கடந்த மார்ச் 6ஆம் தேதி நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார்," என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்