கேப் கனாவெரல்: அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் செய்தனர்.
இருவரும் 8 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் இருவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருக்கும் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவர்களை மீட்க முயற்சிகள் செய்தும் பலன் அளிக்காததால் விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வருவதற்கு எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது.
இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்கலத்தின் மூலம் இன்று மார்ச் 16 ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக கடந்த மார்ச் 13 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை 4.33 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் நுழைந்ததை கண்டதும் புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தின் ஹட்ச்சை திறந்து மணியை அடித்தார்.
பின்னர் புதிய விண்வெளி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக மிதந்து வந்ததும் அவர்களை கட்டிப்பிடித்து கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் உள்பட 7 பேர் உள்ளனர்.
இதையும் படிங்க: “முஸ்லீம்கள் நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் என ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரராவது சொல்லி இருக்கிறரா” - கனிமொழி கேள்வி!
இதுகுறித்து சுனிதா வில்லியம்ஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் கூறும்போது, "இது ஒரு அற்புதமான நாள். எங்கள் நண்பர்கள் வருவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது." என்று கூறினார்.
வானிலை நன்றாக இருந்தால் வில்மோர், வில்லியம்ஸ் மற்றும் 2 விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற, 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் வருகிற மார்ச் 19 ஆம் தேதி புதன்கிழமை பூமி திரும்பும். அதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பானை நாடுகளை சேர்ந்த 11 பேர் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் இருப்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.