லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படையை முடுக்கிவிட்டுள்ளார். இவர்கள் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட புலப்பெயர்ந்தோர்களை தேசிய காவல்படை கைது செய்துள்ளது.
ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம், லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் ட்ரம்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று (ஜூன் 8) கவர்னர் கவின் நியூசம் டிரம்பிற்கு அனுப்பிய கடிதத்தில், '' காவல்படையினரின் நடவடிக்கையால் நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாநில இறையாண்மையை கடுமையாக மீறும் காவல் படை நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேயர் கரேன் பாஸ் கூறுகையில், '' லாஸ் ஏஞ்சல்ஸில் நாம் காண்பது நிர்வாகத்தால் தூண்டப்பட்டுள்ள குழப்பம். இந்த நடவடிக்கை நிச்சயமாக பொதுப் பாதுகாப்பு பற்றியது அல்ல'' என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளில் ஆளுநரின் தலையீடு இல்லாமல் தேசிய காவல்படை செயல்பட்டது இதுவே முதன் முறை ஆகும். நாட்டில் குடிபெயர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக செயல்படுத்தி வருவது அந்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ட்ரம்ப் உடைய ஒடுக்குமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மக்கள் பலரும் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கூட்டம் சேர விடாமல் தேசிய காவல்படையும், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்து வருகின்றனர். பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் போலீசார் மீது கற்களை எறிந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், '' அமெரிக்க அரசின் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி எழும் ஆபத்து இருப்பதால் சட்ட விதியைப் பயன்படுத்தி தேசிய படைகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், தேசிய காவல்படையின் 2,000 உறுப்பினர்களைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லாஸ் ஏஞ்சல்ஸில் வன்முறையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் தப்பிக்கப் போவதில்லை. நாங்கள் எல்லா இடங்களிலும் துருப்புக்களைக் கொண்டிருப்போம். பைடனின் ஆட்சியில் அமெரிக்கா சிதறியதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.