வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி, உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, போப் பதவியை எட்டியவர் இவர். யார் இந்த போப் பிரான்சிஸ், மற்ற போப்களில் இருந்து அவர் எப்படி வித்தியாசமானவர் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐர்ஸ் நகரில் கடந்த 1936-ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி பிறந்த போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜோ்ர்ஜ் மாரியோ பெர்கோலியோ.
சாதாரண கணக்காளராக இருந்த அவரது தந்தை மாரியோவும், தாயார் ரெஜினாவும் வாழ்வாதாரம் தேடி இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவுக்கு குடியேறியவர்கள் ஆவர். அவர்களுக்கு பிறந்த 5 குழந்தைகளில் ஒருவர்தான் போப் பிரான்சிஸ்.

நோய்வாய்ப்பட்ட குழந்தை: தனது மற்ற சகோதரர்களை போல அல்லாமல், மிகவும் நோஞ்சான் குழந்தையாக பிரான்சிஸ் இருந்தார். குழந்தை பருவத்திலேயே கடுமையாக நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவரது ஒரு நுரையீரலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இவ்வாறு உடலளவில் பல பிரச்னைகள் இருந்த போதிலும், தனது கல்வியை அவர் கைவிடவில்லை.
படிப்பில் அதீத ஆர்வம்: இயற்கை வேதியியல் தொழில்நுட்பம் படித்த அவர், மதப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர், கிறிஸ்து மீதான அதிக பற்றுதல் காரணமாக 1958 இல் கத்தோலிக்க மத நிறுவனத்தில் போதகராக சேர்ந்தார். இருந்தபோதிலும், படிப்பை தொடர்ந்த அவர், 1963இல் தத்துவத்திலும் பட்டம் பெற்றார். இதையடுத்து, தியாலஜி படிப்பிலும் (இறை படிப்பிலும்) பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க |
போப் ஆக மாறிய பிரான்சிஸ்: திருச்சபை பணிகளில் மிகவும் மும்முரமாக இயங்கி வந்தததால், பல கத்தோலிக்க திருச்சபைகளில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2001-இல் கார்டினலாக நியமிக்கப்பட்ட அவர், 2005ல் பேனடிக்ட் XVI போப்பை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடரந்து, 2013ஆம் ஆண்டு அப்போதைய போப்பாக இருந்த போப் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தபோது, புதிய போப்பாக இவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தான் "பிரான்சிஸ்" என்ற பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க கண்டத்தில் இருந்து வந்த முதல் போப் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஆடம்பரத்தை விரும்பாதவர்: இதுவரை இருந்த அனைத்து போப்களையும் விட, சற்று வித்தியாசமாக திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ். மிகவும் எளிமையான வாழ்க்கையை தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர். சொகுசு கார் அளிக்கப்பட்ட போதிலும், வேண்டாம் எனக் கூறி, பொது போக்குவரத்தில் பயணம் செய்தவர்.
சமையலுக்கென்று தனி ஆள் வைக்காமல், தனது உணவை தானே சமைத்து உண்டவர். இதுபற்றி கேட்ட போது, "எனது மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன்தான்" என பதிலளிப்பாராம். மேலும், இதுவரை பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த போப்களின் இறுதிச்சடங்குகளை போல இல்லாமல், மிக எளிமையாக நடக்க வேண்டும் என்பதையே தனது இறுதி ஆசையாக தெரிவித்திருக்கிறார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.