ஜெருசலேம்: நிவாரண பொருட்களுடன் காசா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இஸ்ரோல் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் நாடு திரும்பியுள்ளார்.
காசா மீது இஸ்ரோல் தொடுத்துள்ள போர் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மனித நேய ஆர்வளர்களுடன் உணவு மற்றும் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களுடன் ‘மேட்லீன்’ எனும் கப்பல் இத்தாலியில் இருந்து காசாவுக்கு புறப்பட்டது.
அந்த கப்பலில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன் உடன் பத்திரிகையாளர்கள் சிலர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உணவு எடுத்து சென்ற கப்பல், இஸ்ரேல் கடல் எல்லையைக் கடந்தபோது, கப்பலுடன் அதிலிருந்த 12 பேரையும் அந்நாட்டு கடற்படை சிறைபிடித்தது.

இதனையடுத்து காசா சென்றடைவதற்கு 200 கி.மீ தொலைவில் இருக்கும் போது, தன்னையும், தன்னுடன் வந்த 11 பேரையும் இஸ்ரேல் கடற்படையினர் கடத்தி சென்றதாக கிரேட்டா தன்பெர்க் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அந்த காணொளி வெளியான சில மணிநேரங்களில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், தங்கள் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டது. அதில், கிரேட்டா தன்பெர்க் தற்போது இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வழியாக ஸ்வீடனுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Greta Thunberg just departed Israel on a flight to Sweden (via France). pic.twitter.com/kWrI9KVoqX
— Israel Foreign Ministry (@IsraelMFA) June 10, 2025
இதற்கிடையில், இஸ்ரேலின் சட்ட உரிமைகள் குழு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிரேட்டா தன்பெர்க் உடன் இரண்டு சமூக ஆர்வலர்கள், ஒரு பத்திரிகையாளர் என மொத்தம் 4 பேர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. மேலும், கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட பிற சமூக ஆர்வலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோத குடியேற்றம்; லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த போராட்டம்! தலைவிரித்தாடும் ட்ரம்ப் ஆதிக்கம்! |
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சிறு குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இந்த சூழலில், உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் இடைமறித்து வருகிறது. இது மனித நேயமற்ற செயல் என பலரும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.