டெல்அவிவ் (இஸ்ரேல்): லெபனானில் பேஜர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஹில்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 1000 பேர் காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று அரேபிய செய்திகளை மேற்கோள்காட்டி லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.
லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஹில்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.
இதில் ஹில்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1.000 பேர் காயம் அடைந்துள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவிலும் இதேபோன்று தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், லெபனானுக்கான ஈரானிய தூதர் முஸ்தபா அமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று லெபனான் குற்றச்சாட்டியுள்ளது. லெபனானின் இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.
லெபனானின் வடக்கு எல்லைப் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள 60 ஆயிரம் இஸ்ரேலியர்களை அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றும் நோக்கத்துடன், அக்குடியிருப்புகள் மீது ஹில்புல்லா அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாளைக்கு சராசரியாக 40 ராக்கெட்கள் வீதம் இஸ்ரேலியர்களின் குடியிருப்புகள் மீது ஹில்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர் என்றும், இதுவரை 6,700 ராக்கெட் மற்றும் ட்ரோன்களை கொண்டு அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், லெபனானில் இன்று நூதன தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.