இந்தியா மீது 50% வரி விதித்த டிரம்ப்! நியாயமற்றது என வெளியுறவுத்துறை கண்டனம்!
அமெரிக்காவின் இந்த முடிவு ‘மிகவும் தவறானது; நியாயமற்றது’ என்று விமர்சித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா தனது நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.


Published : August 6, 2025 at 8:18 PM IST
|Updated : August 6, 2025 at 8:26 PM IST
வாஷிங்டன்: இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் வரியை அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ளும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவை வலியுறுத்தி வந்தார். ஆனால், அதற்கு செவிசாய்க்காமல் ரஷ்யா உடனான வணிக உறவை இந்தியா நேர்த்தியாகக் கடைப்பிடித்து வந்தது.
மேலும், கச்சா எண்ணெய்யை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.
இது நியாயமற்ற செயல் என இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றது, இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதனை கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப், தற்போது மீண்டும் 25% கூடுதல் வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்தியா மீது 50 விழுக்காடு எனும் கடுமையான வரியை அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “சமீபகாலமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான விளக்கத்தை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிவிட்டோம். சந்தை சார்ந்து இந்திய மக்களின் நலனை கருத்திற்கொண்டு நாங்கள் முடிவுகளை எடுத்து வருகிறோம்.
வேறு நாடுகளின் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. ஆனால், இந்தியாவை இலக்காக வைத்து அமெரிக்கா கடுமையான வரிகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் இந்த முடிவு ‘மிகவும் தவறானது; நியாயமற்றது’ என்று விமர்சித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா தனது நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கண்டனம்
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது இந்தியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதார அச்சுறுத்தல் என்றும், நமது நாட்டை அநியாயமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்குள் அமெரிக்கா தள்ள முயற்சிப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தனது பலவீனங்களை வெளிப்படுத்தாமல், இந்திய மக்களின் நலன்களைக் காக்க உறுதியோடு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

