பெய்ஜிங்: சீனா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்து வரும் நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை சீனா 84 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மற்ற நாடுகளையும் பதட்டம் அடைய செய்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா அதீத வரியை உயர்த்தியதன் விளைவாக தற்போது சீனா மீதான வரி 145 சதவீதமாக உள்ளது. அண்மையில் சீன பொருட்களுக்கு 84 சதவீதமாக இருந்த வரியை அதிபர் டிரம்ப் 125 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், ஃபெண்டானில் தொடர்பான இறக்குமதிகளுக்கு உள்ள 20% வரியை அவர் சேர்க்கவில்லை. இதனால், சீனா மீது 125 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டாலும் சீனா பொருட்களுக்கான வரியானது 145 சதவீதமாகத்தான் உள்ளது.
இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரியை உயர்த்தி பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை வரும் சனிக்கிழமை முதல் 84 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக சீனா உயர்த்தி அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளுக்கான வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கும் சூழலில், அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே புதிய வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் மீது அமெரிக்க உயர்த்தி வரும் வரி விதிப்பு நடவடிக்கையை "பொருளாதார மிரட்டல்" என சீனா தெரிவித்த நிலையில், சீனா மீதான வரியை உயர்த்தி டிரம்ப் பதிலடி கொடுத்தார். இதனை சீனா தனது எதிர் நடவடிக்கையாக அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை 84% லிருந்து 125% ஆக அதிகரித்துள்ளது. இது சீனா மீது அமெரிக்க உயர்த்தி விதித்துள்ள 125 சதவீத வரிக்கு நிகரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சீன நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சீனா மீது அமெரிக்கா மாறி மாறி அசாதாரணமாக அதிக வரிகளை உயர்த்துவது ஒரு எண் விளையாட்டாக மாறிவிட்டது. இதற்கு எந்த பொருளாதார முக்கியத்துவமும் காரணமில்லை. உலக பொருளாதார வரலாற்றில் இது ஒரு நகைச்சுவையாக மாறும். சீனாவின் நலன்களில் அமெரிக்க இதுபோல தொடர்ந்து மீறும் பட்சத்தில் சீனா உறுதியுடன் எதிர்த்து இறுதிவரை போராடும்'' என அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய போவதாகவும் அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் வர்த்தக போர் உலகளாவிய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ந்கோசி ஒகோன்ஜோ-இவெலா இதுகுறித்து கூறுகையில், '' அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை கடுமையாக பாதிக்கும்'' என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்