கீவ்: உக்ரைன் மீது இன்று மிகக் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா அரங்கேற்றி இருக்கிறது. குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) அன்று நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றன.
எத்தனை நாடுகள் மத்தியஸ்தம் செய்த போதிலும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் போர் மட்டும் நின்றப் பாடில்லை. எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் தாக்குதல்கள் நடத்தப்படாமல் இருந்து வந்தன.
சீறிய ஏவுகணைகள்:
இந்நிலையில், இந்த சிறு இளைப்பாறுதலையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இன்று குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, அங்குள்ள சுமி நகரில் ஏராளமானோர் வீதிகளில் உற்சாகமாக திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், காலை 10.15 மணியளவில் ரஷ்யாவின் இரண்டு பாலிஸ்டிக்ஸ் ஏவுகணைகள் சுமி நகரை தாக்கின.
32 பேர் பலி:
இந்தக் கொடூர தாக்குதலில் 2 குழந்தைகள், பெண்கள் உட்பட 32 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.10 குழந்தைகள் உட்பட 84 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜெலன்ஸ்கி ஆவேசம்:
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அருவருப்பான ஒருவரால் மட்டும்தான் இத்தகைய செயலில் ஈடுபட முடியும் எனக் கூறியுள்ளார். மேலும், எந்த பேச்சுவார்த்தையாலும் ஏவுகணைகளையும், பறக்கும் வெடிகுண்டுகளையும் நிறுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்த ஜெலன்ஸ்கி, ஒரு தீவிரவாதியை எப்படி அணுக வேண்டுமோ, அப்படித்தான் ரஷ்யாவை அணுக வேண்டும் எனக் கூறினார்.
