சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் களைப்பாக இருக்கும் போது டீ குடித்து விட்டு புகை பிடிக்கின்றனர். இந்த காம்பினேஷன் புத்துணர்ச்சி தருவதாக இருந்தாலும், தீவிரமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டீயுடன், சிகரெட் புகைப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டீயுடன், சிகரெட் புகைப்பது உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 30 சதவீதம் அதிகரிப்பதாக தி அனல்ஸ் ஆப் இண்டர்நேஷனல் மெடிசினின் (The Annals of Internal Medicine) அறிக்கை காட்டுகிறது. சூடான டீ செரிமான செல்களை சேதப்படுத்தும் நிலையில் டீ அருந்தி விட்டு, சிகரெட் புகைப்பது செல் சேதத்தின் அபாயத்தை இரட்டிபாக்கும் என்று இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
டீயில் உள்ள காஃபின், செரிமானத்திற்கு உதவும் அமிலத்தை வயிற்றில் உற்பத்தி செய்யும். ஆனால் அதிகப்படியான காஃபின் வயிற்றில் செல்வது தீங்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிகரெட் மற்றும் டீ இரண்டுமே ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் இதய துடிப்பு அதிகரித்து ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். சிகரெட் மற்றும் டீயை ஒன்றாக எடுத்துக்கொள்வது அஜீரணம், மலச்சிக்கல், அல்சர் உள்ளிட்ட செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: அல்சைமர் நோய்க்கு இயற்கை முறையில் சிகிச்சை - ஆய்வு கூறுவது என்ன?
டீயுடன், புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
- மாரடைப்பு
- தொண்டை புற்றுநோய்
- நுரையீரல் புற்றுநோய்
- மலட்டுத்தன்மை அல்லது குழந்தையின்மை
- நினைவாற்றல் இழப்பு
- மூளை மற்றும் இதய பக்கவாதம்
- ஆயுட்காலம் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
டீ மற்றும் புகை பழக்கத்தை கைவிடுவது எப்படி?:
பணி அழுத்தம், மன அழுத்தம் காரணமாக பலர் டீயுடன் சேர்த்து புகைப்பிடிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் டீயுடன், புகை பிடிப்பது தூக்கமின்மையை ஏற்படுத்தி மன அழுத்தத்தை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால் புகை பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து, முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும், பால் டீ குடிப்பதற்கு பதிலாக ஹெர்பல் டீ குடிக்கலாம்.
மன அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவு முறையையும், தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். புகை பழக்கத்தை கைவிடுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் மருத்துவர்களை பரிந்துரைக்கவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்