ஹைதராபாத்: உயர் இரத்த அழுத்தம் தான் ஆபத்தானது, குறைந்த இரத்த அழுத்தத்தால் எந்த பிரச்சனைகளும் இல்லை எனப் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது தான் இல்லை என்கிறார் பொது மருத்துவர் டி. பிரமோத் குமார். இது, பக்கவாதம் முதல் மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக, பிபி 120/80 மிமீ hg இருப்பது சிறந்தது. மருத்துவரீதியில் 90/60 mmHgக்கு குறைவாக இருந்தால், அது லோ-பிபி (Low Blood Pressure) என்று கருதப்படுகிறது என்கிறார் மருத்துவர் பிரமோத் குமார். லோ பிபி வந்தால் என்ன செய்வது? என்ன சாப்பிட்டால் லோ பிபி நீங்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்..
காரணங்கள் என்ன?:
- இதயம் தொடர்பான பிரச்சனை
- தைராய்டு
- ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது
- ஹார்மோன் சமநிலையின்மை
- நீர்ச்சத்து குறைபாடு
- இரத்தம் அளவு குறைவது
இது தவிர, விபத்துகளின் போது இரத்தப்போக்கு அதிகமாகும்போது, சில மருந்துகளை தேவையான அளவை விட அதிகமாக பயன்படுத்தும் போது, லோ பிபி வர வாய்ப்பு உள்ளது.
லோ பிபி அறிகுறிகள்:
- தலைவலி
- மயக்கம் மற்றும் தலைசுற்றல்
- குமட்டல்
- பார்வை மங்கல்
- சுவாசிப்பதில் சிரமம்
- அதிக இதயத்துடிப்பு
- நீரிழப்பு
இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவரை அணுகி உகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
லோ பிபி-க்கு சிறந்த உணவு?
1.உலர் திராட்சை: இவை, அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக இருந்து இரத்த அழுத்த அளவை சரியான அளவு பராமரிக்கிறது. இரவில் உலர் திராட்சையை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை நீருடன் உட்கொள்ளும் போது நல்ல மாற்றத்தை காணலாம்.
2.பாலும் பாதாமும்: ஊற வைத்த 4 -5 பாதமை அரைத்து தினமும் காலை ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
3.உப்பு: உப்பில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் உண்ணும் உணவில் போதுமான அளவு உப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள்
4.தண்ணீர்: உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதனால், ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5.பூண்டு: பூண்டில் உள்ள உட்பொருள்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. தினசரி உணவில் பூண்டு சாப்பிடலாம் அல்லது இரவு தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடலாம். இது தவிர, இரத்த அழுத்தம் குறையும் சூழ்நிலையில், காபி, எலும்பிச்சை ஜூஸ், சாக்லேட், வாழைப்பழம், கிவி, போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
Low BP உள்ளவர்கள் செய்ய வேண்டியவை...
- லோ பிபி-ஐ தவிர்க்க, கட்டாயமாக வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்
- தினமும் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, உப்பு அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் சரியான அளவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்
- ஆல்கஹால் மற்றும் காஃபின் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்
- உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்
- இறுதியாக, ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என டாக்டர் பிரமோத் குமார் பரிந்துரைக்கிறார்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்