JAMA நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தை பருவ நீரிழிவு நோயாளிகள் மற்றும் இறப்புகளை இந்தியா கண்டது என தெரியவந்துள்ளது. கடந்த மாதம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
நீரிழிவு என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட, மீளமுடியாத மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நோயாகும். இன்சுலின் உற்பத்தி போதுமானதாக இல்லாததாலோ அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடலின் இயலாமையாலோ உடலால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை கண்டுகொள்ளாமல் விடும்போது, இதயம், நரம்புகள் மற்றும் கண்பார்வையை கூட சேதப்படுத்தும். குழந்தை பருவ நீரிழிவு நோய் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
டைப் 1 நீரிழிவு நோய்: உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலினை உற்பத்தி செய்யும் கணைய செல்களைத் தாக்கும்போது இந்த வகை நீரிழிவு நோய் நிகழ்கிறது. இன்சுலின் என்பது சர்க்கரையை ஆற்றலுக்காகப் பயன்படுத்த செல்களுக்குள் நுழைய உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் இன்சுலின் செயலற்று இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை படிந்து டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
டைப் 2 நீரிழிவு நோய்: உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது இந்த வகை பிரச்சனை ஏற்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோய் பெரியவர்கள் மத்தியில் பொதுவானது என்றாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் சூழல் நிகழ்கிறது. இரண்டு வகைகளும் உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்துகின்றன. இதனை ஆரம்ப காலத்தில் கண்டுகொள்ளாமல் விடுவது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளில் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள்:
குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருந்தால் அதன் அறிகுறிகள் விரைவாக தென்பட ஆரம்பிக்கும். அவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது பல கடுமையான நிலைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய் இருந்தால் அவை காட்டும் அறிகுறிகள் என்ன்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்: குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தில் முதலாவது வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், அதிகப்படியான சர்க்கரையை அகற்ற சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இதனால் அதிக சிறுநீர் வெளியேறும். அதிலும் குறிப்பாக, இரவில் தூக்கத்திலிந்து எழுந்து பலமுறை சிறுநீர் கழிக்கும் சூழல் ஏற்படும்.
அதிகப்படியான தாகம், பசி: அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் விளைவாக உடலில் நீர்ச்சத்து குறையும் சூழல் ஏற்படும். இதனால் குழந்தைக்கு அதிக தாகம் ஏற்படுகிறது. அவர்கள் போதிய தண்ணீர் குடித்தாலும் அவர்களுக்கு தாகம் எடுக்கலாம். இதே போல், குழந்தைகள் வயறு நிரம்ப சாப்பிட்டாலும் அவர்களுக்கு பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். உடலின் செல்கள் ஆற்றலுக்குப் போதுமான சர்க்கரையைப் பெறாத போது மூளை அதிகமாக சாப்பிட சமிக்ஞை செய்யும்.
எடை இழப்பு: அதிகமாக சாப்பிட்டாலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எடை இழக்க நேரிடும். ஏனெனில், உடல் சர்க்கரையை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது, கொழுப்பையும் தசையையும் உடைத்து ஆற்றலை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது.
சோர்வு மற்றும் பலவீனம்: உயர் இரத்த சர்க்கரை அளவு குழந்தைகளை சோர்வாகவும் பலவீனமாகவும் உணர வைக்கிறது. விளையாட்டு அல்லது பிற செயல்பாடுகளில் ஈடுபடும் போது ஆற்றல் குறைவாக தோன்றும். இதனால், சோர்வடைந்து காணப்படுவார்கள்.
மங்கலான பார்வை: உயர் இரத்த சர்க்கரை கண்களின் லென்ஸ்களில் இருந்து திரவம் வெளியேற காரணமாகி, குழந்தையின் தெளிவாக கவனம் செலுத்தும் திறனைப் பாதிக்கும்.
வெட்டுக்கள் மற்றும் காயங்களை மெதுவாக குணமாவது: நீரிழிவு நோய், காயங்களை குணப்படுத்தும் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைப் பாதிக்கலாம். வெட்டுக்கள் அல்லது காயங்கள் குணமடைய அதிக நேரம் ஆகலாம்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, குறிப்பாக ஈஸ்ட் தொற்று அல்லது சிறுநீர் பாதை தொற்றுகள் அடிக்கடி ஏற்படக்கூடும்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.