சரியான நேரத்தில் இன்சுலின் பரிசோதனை: நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் தங்கள் இரத்த சர்க்கரை அளவையும் இன்சுலினையும் தவறாமல் பரிசோதிக்க வேண்டும். கோடை காலத்தில் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலும், பருவத்திற்கு ஏற்ப உங்கள் மருந்தின் அளவை மாற்ற வேண்டியிருந்தால் மருத்துவரை அணுகவும். சில மருந்துகள் அல்லது மாத்திரைகள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மையை கொண்டிருக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் இழப்பு ஏற்பட்டால், குளுக்கோஸ் அளவு தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். இது தவிர, வெப்பத்தை தணிக்க குளிர் பானங்கள் குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். ஆதனால், நீரிழிவு நோயாளிகள் காஃபின், குளிர் பானங்கள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை சர்க்கரை அளவை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளியே செல்ல வேண்டாம்: வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிக வெப்பநிலை உடல் இன்சுலினைப் பயன்படுத்தும் விதத்தையும் மாற்றுகிறது. நீரிழிவு நோயாளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், முடிந்தவரை நிழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தவிர, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்: கோடையில் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானத்திற்கு நல்லது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். அதனால் குறைவான உணவை உட்கொள்வோம். இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்கும்.
குறைந்த கலோரி ஜூஸ்: வெப்ப காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க பழச்சாறு குடிப்பது அவசியம். ஆனால் நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை குடிக்க வேண்டாம் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். பழச்சாறு தவிர, எலுமிச்சை, துளசி, சீரகம் மற்றும் புதினா தண்ணீரை குடிக்கலாம்.
தளர்வான மற்றும் லேசான ஆடைகள்: கோடையில் வெளியே செல்லும்போது வெளிர் நிற பருத்தி மற்றும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான மற்றும் அடர் நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். இவை வெப்பத்தை அதிகரித்து உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். பருத்தி உடலில் இருந்து வியர்வையை உறிஞ்சிவிடும். இது தவிர, மஞ்சள், வெள்ளை மற்றும் பிற வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.