- தி.சிந்து
பெண்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது, செல்ல வேண்டிய இடம் என்ன? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன் தங்களுக்கு மாதவிடாய் எப்போது ஏற்படும் என்ற கேள்வி மனதில் சுழல ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பயணம் செய்வது அவசியமா? என யோசிப்பார்கள்.
பெரும்பாலான பயணங்களும் திருமணங்களும் பெண்களின் மாதவிடாய் நாட்களை கணக்கில் வைத்து தான் நிச்சயிக்கப்படுகிறது. மாதவிடாய் நாட்கள் சவாலானது என்பதால் அதை சமாளிப்பது பல பெண்களுக்கு கடினம். எட்டு நாட்கள் பயணமாக விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பியதும், பலருக்கும் மாதவிடாய் சார்ந்த கேள்விகள் எழுந்துள்ளது. விண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? எப்படி சமாளிப்பார்கள்? மாதவிடாய் பொருட்களை தங்களுடன் வைத்திருப்பார்களா?

ஆரம்ப காலத்தில் விண்வெளியில் மாதவிடாயை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பெண் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை. 1983ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி வீராங்கனை சென்று வரும் வரை. 1983ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்கப் விண்வெளி வீராங்கணை சாலி ரைடு 6 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு சென்று வந்தார். விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற வரலாற்றையும் படைத்தார்.
சாலி பூமிக்கு திரும்பியதும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், அவருக்கு கேட்க்கப்பட்ட கேள்வி, 'விண்வெளியில் மாதவிடாயை எப்படி சமாளித்தீர்கள்' என்பது தான். சாலி விண்வெளிக்கு செல்லும் போது மாதவிடாய் பொருளான டாம்பானை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். 'பல விண்வெளி வீராங்கனைகளை விண்வெளியில் இருக்கும் போது தங்கள் மாதவிடாயைத் தள்ளிப்போடவே விரும்புகிறார்கள்' என்று 'என்பிஜே மைக்ரோகிரேவிட்டி' என்ற இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுவதில் உடல் சார்ந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் வர்ஷா ஜெயின்.

ஈர்ப்பு விசை இரத்த ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
விண்வெளியிலும் பூமியில் இருப்பதை போல் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் எனக் கூறும் RISAA IVF மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் ரீட்டா பக்ஷி, "விண்வெளியில் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாதிருப்பதால் மாதவிடாய் ரத்தப் போக்கு மேல்நோக்கி தள்ளப்படும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. விண்வெளிக்கு சென்று வந்த வீராங்கனைகளின் அனுபவமே இதற்கு சான்று. நுண் ஈர்ப்பு விசை மாதவிடாயில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்பதை இது நிரூபிக்கிறது"

விண்வெளியில் மாதவிடாயை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
"பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது IUDகள் மூலமாகவும் அவர்கள் தங்கள் மாதவிடாயை தள்ளிப்போட வாய்ப்பு உள்ளது. மாதவிடாய் ஏற்படுத்தும் சிக்கலை தவிர்க்க விண்வெளி வீராங்கனைகள் அவற்றை தள்ளிப்போட தான் விரும்புகிறார்கள். மாதவிடாய் சுழற்சியைக் கடந்து செல்லும் பெண்களும் டம்பான்கள் அல்லது பேட்களைப் பயன்படுத்துகிறார்கள். மாதவிடாய் ஆரோக்கியத்தை பாதிக்காது என்பதால் விண்வெளி வீரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் பணியில் கவனம் செலுத்த முடியும்"
விண்வெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்?
"விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள அதே மாதவிடாய் சுழற்சி தயாரிப்புகளான பேடுகள், டம்பான்கள் மற்றும் மென்சுரல் கப்களை பயன்படுத்துகிறார்கள். டம்பான்கள் சிறியதாகவும் எளிதில் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக்கூடியதாகவும் இருப்பதால் அவை ஏற்றதாக இருக்கும். மாதவிடாய் சுழற்சியால் விண்வெளியில் எந்த பாதிப்பும் ஏற்படாது அதே நேரத்தில் வேலையில் சிறப்பாக கவனத்தை செலுத்தலாம்"

பெண் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் விண்வெளிப் பயணத்தின் போது, குறிப்பாக விணவெளியில் ஆய்வு மேற்கொள்ளும் போது, தங்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளிப்போடுகிறார்கள். இதற்காக பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள் என NCBI இதழில் வெளியான ஆய்விலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்சுமை: விண்வெளியிற்கு அதிகமான பொருட்களை கொண்டு செல்வது சாத்தியமல்ல. உயிருக்கு அத்தியவசியான நீர், விண்வெளி நிலையத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. விண்வெளி வீரர்களின் சிறுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. விண்வெளியில் உருவாகும் கழிவு நீர், குறிப்பாக மனித சிறுநீர், மாற்றப்பட்ட வேதியியல் கலவையைக் கொண்டுள்ளது. விண்வெளியில் மனித வளர்சிதை மாற்றத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக விண்வெளியில் உள்ள சிறுநீரில் பூமியை விட Ca2+ செறிவு மிக அதிகமாக உள்ளது. மாதவிடாயில் உள்ள ரத்ததில் திடக்கழிவு இருப்பதால் அதனை மறுசுழற்சி செய்வது சாத்தியம் இல்லை.
இதையும் படிங்க: விண்வெளி மையமாக மாறும் தூத்துக்குடி - காஸ்மிக் போர்ட் நிறுவனத்தின் சாதனை!