ஆனந்த்நாக்: சிறுவனின் மூக்குத் துவாரத்தில் இருந்த பாம்பு போன்ற தோற்றம் அளிக்கும் புழுவை தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
காஷ்மீரை சேர்ந்த சிறுவன் கடந்த சில நாட்களாக உடல் எடை குறைந்து வருவதையும், சரியான உணவு உண்ணாமல் இருப்பதையும் அவரது பெற்றோர்கள் கவனித்தனர். மேலும், அந்த சிறுவனின் மூக்கில் புழு போன்ற உயிரினம் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த சிறுவனை தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு அவரது பெற்றோர் அழைத்து வந்தனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்தனர். அப்போது அந்த சிறுவனின் மூக்கில் புழு போன்ற ஒன்று இருந்தது. இதனைத் தொடர்ந்து காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்தனர். ஸகேன் செய்து பார்த்தபோது அந்த சிறுவனின் மூக்கில் பாம்பு போன்ற புழு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை பிரிவின் தலைமை மருத்துவர் அமீர் யூசுப்பிடம் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அவரது அறிவுறுத்தலின்படி சிறுவனின் மூக்கில் இருந்த புழுவை கருவி ஒன்றின் துணையோடு உறிஞ்சி வெளியே எடுத்தனர்.
இதையும் படிங்க: மணமணக்கும் சுவையான சம்பா கோதுமை பொங்கல்...நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
அந்த புழு பார்ப்பதற்கு ஒரு பாம்பு போலவே காணப்பட்டது. ஆனால், பாம்பு அல்ல என மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 செ.மீ நீளம் கொண்டதாக அந்த புழு காணப்பட்டது. எனவே, அந்த புழுவை மருத்துவர்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எதனால் இது போன்ற புழு சிறுவனின் மூக்கில் உருவானது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
புழு தொடர்ந்து சிறுவனின் மூக்கிலேயே இருந்திருந்தால், நோய் தொற்று ஏற்பட்டு மேலும் பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தியிருக்கும் என்றும், சரியான தருணத்தில் அந்த சிறுவனின் மூக்கில் இருந்து புழு அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்த நிலையில் ஆனந்த்நாக் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் ருக்ஷனா நஜீப், சிறுவனின் மூக்கில் இருந்த புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டதற்கு காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.