கிராம்பு அதன் உணவு பயன்பாடுக்காக மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பெயர் பெற்றுது. இது வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. கிராம்பை 1,100 க்கும் மேற்பட்ட பிற உணவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கிராம்பில் மற்ற உணவுகளை விட மூன்று மடங்கு ஆக்ஸிஜனேற்றிகள் இருந்ததாக ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிசிங் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும். இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் கிராம்பு நன்மை பயக்கும். இந்நிலையில், கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
நோய் எதிர்ப்பு சக்தி: கிராம்பில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுப்படுத்த உதவும். இது தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இந்நிலையில், தினசரி காலை அல்லது மாலை நேரத்தில் கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரை குடிப்பது சிறந்தது.
செரிமானத்திற்கு நல்லது: கிராம்பில் செரிமானத்தை ஊக்குவிக்கும் இயற்கையான செரிமான பண்புகள் உள்ளன. கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டவும், செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். 2020 ஆம் ஆண்டு BMC Complementary Medicine and Therapies இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கிராம்பு தண்ணீர் குடிப்பது பல்வேறு வகையான செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் செரிமானத்தை எளிதாக்குவதிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
வாய்வழி சுகாதாரம்: கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்பு தண்ணீரை தொடர்ந்து குடிப்பது பல்வலியைக் குறைக்கவும், ஈறு வலியைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும். பழங்காலங்களாக, பல் வலிக்கு கிராம்பு பயன்படுவது அனைவரும் அறிந்ததே.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: கிராம்பில் உள்ள யூஜெனால் (Eugenol) மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் என்று நீரிழிவு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய் அபாயம் உள்ளவர்கள் கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம். இதனை NCBI ஆய்வும் உறுதிப்படுத்தியுள்ளது.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: கிராம்பில் உள்ள யூஜெனால் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்றி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்கிறது NCBI. இது கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும் Fatty Liver நோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வு கூறுகிறது.
இதய ஆரோக்கியம்: கிராம்பு தண்ணீரை தவறாமல் குடிப்பது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இது கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை பராமரிப்பதற்கும் சிறந்தது.
இதையும் படிங்க: தினசரி கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.