சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், 2050ம் ஆண்டுக்குள், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 73% அதிகரித்து 156 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (International Diabetes Federation) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இது இந்தியர்களுக்கான எச்சரிக்கை மணி என்பதையும் அடிக்கோடிட்டுள்ளது.
வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், வேலை அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை காரணமாக, நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உச்சத்தை எட்டும் பாதிப்பு: சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது 89.8 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 25 வருடத்தில் இந்த எண்ணிக்கை 73 சதவீதம் அதிகரித்து 156 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் என்கிறது. இந்த மாதிரியான சூழலில், நாம் சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து நாம் விலகி இருக்க முடியும். அந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
சூரிய ஒளி: இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் சர்க்காடியன் தாளத்தை (circadian rhythm) சீராக வைக்க அதிகாலை நேர சூரிய ஒளி உதவுகிறது. NCBI வெளியிட்ட ஆய்வின் படி, அதிகாலையில் எழுந்து சூரிய ஒளியைப் பெறுவது இரத்த சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. காலையில் நடைபயிற்சி செய்ய முடியாவிட்டாலும், 15 நிமிடங்களுக்கு சூரிய ஒளியில் நேரத்தை செலவிடவேண்டும். இந்த சிறிய பழக்கம் நீண்ட காலத்திற்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
வெந்தய நீர்: வெந்தயத்தை ஊறவைத்த நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானம் என்கிறது ஆய்வு. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தையும் உறிஞ்சுதலை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடித்து வர, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதையும் படிங்க: டைப் 2 நீரிழிவை ஏற்படுத்தும் கூல்டிரிங்க்ஸ்... உயிர்க்கொல்லியான சர்க்கரைக்கு மாற்று என்ன? |
தீவிரமான உடற்பயிற்சி வேண்டாம்: காலையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது கார்டிசோலை (cortisol) அதிகரிக்கும். இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கக்கூடும். இதற்கு பதிலாக, யோகா செய்வது, வெறும் காலில் புல்லில் நடப்பது, 10 நிமிடத்திற்கு பிராணயாமம் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம். காலையில், குறைந்த உடல் செயல்பாடு குளுக்கோஸ் அளவைப் பராமரிக்க உதவும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இலவங்கப்பட்டை தண்ணீர் : பட்டை மற்றும் 1 டீஸ்பூன் மிளகு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கருப்பு மிளகில் காணப்படும் ஆல்கலாய்டு பைப்பரின் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், மிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.
வெறும் வயிற்றில் பழங்கள்?: வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்காது. இருப்பினும் பழங்களை சாப்பிட விரும்பினால், குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள கொய்யாப்பழம், கிவி, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். இவை, காலை உணவுக்குப் பின் அதிகரிக்கும் சர்க்கரையை தடுப்பதோடு செரிமானத்தையும் ஆதரிக்கிறது.
காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்: காலை எழுந்ததில் இருந்து காலை உணவிற்கான இடைவெளி அதிகரிக்கும் போது இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால், நீரிழிவு நோயாளிகள் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் சீரான காலை உணவை உட்கொள்ள வேண்டும். காலை உணவாக புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணத்திற்கு, பாசிப்பருப்பு அடை, ஓட்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.