அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் எண்ணெய் பசை சருமம் முதன்மையானது. அதிலும், கோடை காலத்தில் இந்த பிரச்னையை பற்றி சொல்லவே தேவையில்லை. பருவநிலை மாறும் போது சருமம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளி, எண்ணெய் பசை படிவது போன்றவை அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன. இதற்காக, பல க்ரீம்களை பயன்படுத்தினாலும், சருமத்தில் எண்ணெய் பசை நீங்க உட்புற கவனிப்பு அவசியம். இந்நிலையில், கோடை காலத்தில் சருமத்தில் எண்ணெய் பசை படிவதை தடுக்கும் பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
இளநீர்: இளநீர் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான மூலமாகும். உடலில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்றவும், சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுவதால் இளநீர் சிறந்த நச்சு நீக்கி பானமாகவும் செயல்படுகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க தினசரி ஒரு இளநீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சியா விதை தண்ணீர்: சியா விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இது சரும ஆரோக்கியத்தையும் எடை இழப்பை ஆதரிக்கின்றது. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நீரேற்றத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பசையைக் குறைக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலனை தரும்.
இதையும் படிங்க: |
வெள்ளரிக்காய் மற்றும் புதினா நீர்: வெள்ளரிக்காய் தோல் பராமரிப்பு நன்மைகளுக்காக பெயர் பெற்றவை. அதே போல, புதினா இலைகளின் நன்மைகளும் சருமத்தை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும். சருமத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பசையைக் குறைக்க, வெள்ளரிக்காய் மற்றும் புதினா கலந்த தண்ணீரைக் குடிப்பது நல்லது. இது சருமத்தில் நீரேற்றத்தை பராமரிக்கவும், நச்சுகளை அகற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

தர்பூசணி ஜூஸ்: 90 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, கோடை காலத்தில் உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்தில் சூட்டை தணிக்கவும் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் சிறந்தது. உடலை நீரேற்றமாக வைத்திருந்தால், சருமம் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
மோர்: கோடை காலத்தில் உடலை குளிர்விக்க மோர் மிகவும் பிரபலமான பானமாகும் . இது சருமத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்து ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். வெப்பமான காலத்தில் தொடர்ந்து மோர் குடிப்பது முகப்பருவைத் தடுக்கிறது. இது தவிர, செரிமான பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வாகும்.
கிரீன் டீ: கிரீன் டீ ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை நீக்குவதற்கும் கிரீன் டீ உதவுகிறது.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.