வெள்ளரிக்காயில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளரி சிறந்த தேர்வாக இருக்கிறது. தினமும் ஒரு கப் வெள்ளரிக்காய் சாறு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாகவும் ஆய்வு கூறுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில், கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?: வெள்ளரிக்காய் சாறு ஒரு நல்ல நச்சு நீக்கும் பானமாகவும் செயல்படுகிறது எனக்கூறும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீலதா, வெள்ளரிக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறும் என்கிறார். இது உடலை சுத்தப்படுத்தி பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தினமும் வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிகிறது. இதனால் உடல் எடையும் வேகமாக குறைக்க உதவுகிறது. மேலும், இது தொப்பை கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது என NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. அதிக எடை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினசரி வெள்ளரிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
வெள்ளரிக்காய் சாறு வெப்பத்தின் விளைவுகளையும் குறைக்கிறது. இது வெயிலிலிருந்து பாதுகாப்பை வழங்க உதவுகிறது. ஒரு சிறிய வெள்ளரிக்காயில் சுமார் 96 சதவீதம் தண்ணீர் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இதனால், கோடை காலத்தில் ஏற்படும் நீரிழிப்பை தடுக்க வெள்ளரிக்காய் உட்கொள்வது சிறந்தது. வெள்ளரிக்காயில் உள்ள மெக்னீசியம் நல்ல தூக்கத்தை வழங்கும். மேலும், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். இதில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது நம் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. கூடுதலாக இது நமது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது: சின்ன வெள்ளரிக்காய் குக்குர்பிடின் பி (CucB) எனப்படும் பைட்டோ கெமிக்கல்களின் வளமான மூலமாகும். இது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. ஆய்வின் படி, வெள்ளரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து உட்கொள்வது எலும்புகளை பலப்படுத்துகிறது. இது எலும்பு முறிவு அபாயத்தை பெருமளவில் குறைத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது தெரியவந்துள்ளது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது எனக்கூறும் NCBI இதைச் சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடக்கும் என்பதையும் வலியுறுத்துகிறது. மேலும், செரிமான பிரச்சனை மலச்சிக்கல் மற்றும் அஜீரணப் பிரச்சினையிலிருந்தும் நிவாரணம் அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்