கோடை காலத்தில் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, கோடையில் ஆரோக்கியமாக இருக்க நம் உணவில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மை மற்றும் நீரிழப்பு போன்ற உபாதைகள் ஏற்படலாம். அதன்படி, கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் ஒரு உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவுடன் பார்லி மாவை சேர்த்து செய்யும் போது உடல் சூடு தணியும் என்றால் நம்பமுடிகிறதா? மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், சிறு வயதிலேயே மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுவதாக மூத்த நீரிழிவு நிபுணர் பி.வி.ராவ் கூறுகிறார்.

இன்றைய காலத்தில் பலரது இல்லங்களிலும் சப்பாத்தி நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையில் இருந்து நான்கு முறையாவது சப்பாத்தி செய்து சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. இந்நிலையில், பார்லி மாவை கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்தால் சுவை மற்றும் நன்மையும் இரட்டிப்பாகும்.
பார்லி என்றால் என்ன?: தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது பார்லி. வாற்கோதுமை என்பது பார்லியின் தமிழ் பெயர். இந்த தானியப் பயிர் அதிக வெப்பத்தையும் அதிக குளிர்ச்சியையும் தாங்கக் கூடியது. இது அதிக ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமல்லாமல், இந்த தானியத்தில் டெக்ஸ்ட்ரின் என்ற ஸ்டார்ச் நிறைந்துள்ளதால் அது செரிமானத்தை சீராக்கும்.
நோய்கால உணவாக பார்லி பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில், கடும் காய்ச்சலாலோ அல்லது வயிற்றுப்போக்கினாலோ பாதிக்கப்பட்டால், உடனே கைப்பிடி வாற்கோதுமையை கஞ்சியாக காய்ச்சித் தருவார்கள். இது கோடையில் உடலையும் வயிற்றையும் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாகக் இருக்கும் ஒரு தானியமாகும் என்கிறார் மருத்துவர்.
கோதுமை மாவுடன் பார்லி மாவை ஏன் கலக்க வேண்டும்? : பார்லியின் சுவை சற்று இனிப்பாகவும், அதன் விளைவு குளிர்ச்சியாகவும் இருக்கும். கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்யும்போது, அது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். குறிப்பாக கோடையில், இதன் நுகர்வு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

நன்மைகள் என்னென்ன?:
- வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்: சயின்ஸ் டைரக்ட். காம் இதழின்படி, பார்லியில் உடலை குளிர்ச்சிப்படுத்தும் பண்புகள் உள்ளது. இது கோடை காலத்தில் உட்கொள்ளும்போது உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை உட்கொள்வது வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நீரிழப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
- மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்: பார்லியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதாக NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் பார்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
- வீக்கம் மற்றும் வாயு பிரச்சனை: பார்லியை உட்கொள்வது வயிற்றில் வாயு உருவாவதைத் தடுக்கிறது மற்றும் பசியையும் கட்டுப்படுத்துகிறது. இது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. எனவே, கோடைகாலத்தில் இதன் நுகர்வு மிகவும் நன்மை பயக்கும்.
- எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்: இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இதை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும். இது அதிகப்படியான உணவைக் கட்டுப்படுத்தவும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது என்கிறது ஆய்வு.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்