சென்னை: விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான விடுதலை இரண்டாம் பாகம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ’ஏஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. விரைவில் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் மட்டுமல்லாமல் மிஷ்கின் இயக்கத்தில் ’ட்ரெய்ன்’, பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை துரை செந்தில் குமார் இயக்குவார் என கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு சசிகுமார் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த படத்தின் மூலம் தான் இணைகிறார்கள்.
சிவகார்த்திகேயன் ’எதிர் நீச்சல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான துரை சந்தில்குமார், தொடர்ந்து ’கொடி’, ’பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சூரி நடிப்பில் வெளியான ’கருடன்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார்.
இதையும் படிங்க: இளம் இசையமைப்பாளருடன் இணையும் சிம்பு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இத்திரைப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. ’கருடன்’ போலவே இந்த படத்திலும் இரண்டு பிரதான கதாபாத்திரங்களுக்கிடையே நடைபெறும் சம்பவங்களே திரைக்கதையாக இருக்கலாம்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் முடிவாகவில்லை. ’கருடன்’ திரைப்படத்தில் சசிகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) வருகிற மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.