சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சச்சின்’. அத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ’சச்சின்’ திரைப்படம் ஏப்ரல் 18ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
’சச்சின்’ திரைப்படத்தின் 20 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஆண்டு இத்திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அது தொடர்பான அறிவிப்புகளை கொடுத்து வந்தார். அந்த படத்தின் பாடல்களை மீண்டும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
அந்த வரிசையில் ’சச்சின்’ படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லரை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லரில், சச்சின் திரைப்படத்தில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற வசனங்கள், காட்சித்துணுக்குகள் ஆகியவற்றை புது வகையில் தொகுத்துள்ளனர். 20 வருடங்களுக்குப் பிறகும் கூட இணையத்தில் இந்த டிரெய்லர் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பலரும் ’சச்சின்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக பலரும் காத்திருக்கின்றனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஜெனிலியா, வடிவேலு, பிபாசா பாசு, சந்தானம், ரகுவரன், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவான பாடல்கள் இன்றளவும் இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. சச்சின் - ஷாலு என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான காதல் கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம். விஜய் மற்றும் வடிவேலு இணைந்து செய்யும் நகைச்ச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இன்றும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றன. முன்பிருந்தே 'சச்சின்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்று வரக்கூடிய காரணத்தால், இந்த மறுவெளியீடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் திரைப்படம் வெளியான சமயத்தில் அதனுடன் ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் வெளி வந்தது. அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றையைப் பெற்றதால் சச்சின் திரைப்படம் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படவில்லை என இன்றளவும் எண்ணம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த மறுவெளியீடு முக்கியத்துவம் பெறுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படமானது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அந்த திரைப்படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியல் களத்தில் கவனம் செலுத்தவிருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனால் அவரது பழைய படங்களுக்கு இப்போது பெரும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விஜய் படங்கள் மறுவெளியீடு செய்யப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாடல் பாடி வாழ்த்துச் சொன்ன இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!
ஏப்ரல் 18ஆம் தேதி 'சச்சின்' திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழு இந்த மறுவெளியீட்டுக்கான விளம்பரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மறுவெளியீட்டுக்காக படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.