சென்னை: தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமா இருந்து வருவது ’வாடிவாசல்’. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருந்த இந்த திரைப்படம் கைவிடப்படுவதாக கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வாத்தி, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 9ஆம் தேதி தொடங்கவிருப்பதாக நேற்று (ஜூன் 5) படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வெற்றிமாறனை பொறுத்தவரை அவர், அவரது இயக்கத்தில் கடைசியாக ’விடுதலை 2’ திரைப்படம் வெளியானது. அதற்கடுத்து அவர் ‘வாடிவாசல்’ படத்திற்காக முழுநேரமாக வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது.
எனினும் தற்போது வரை ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இப்படம் குறித்து அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
மேலும் “இந்த ஆண்டே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு மே, ஜுன் மாதங்களில் வாடிவாசல் வெளியாகும்” என்றும் கலைப்புலி தாணு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் கிராபிக்ஸ் வேலைகள் தொடங்கி நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: கார் விபத்தில் தந்தையை பறிகொடுத்த சோகம்... குடும்பத்துடன் தீவிர சிகிச்சையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ!
இதனிடையே ’வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் இப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா, மேலும் சில கதைகளை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என தெரிய வருகிறது.
இந்தப் படங்களுக்கு இடையே வெற்றிமாறன் வாடிவாசல் படத்தைத் தொடங்கினால், நாட்கள் அதிகமாக தேவைப்படும் என்பதால் இப்போதைக்கு ‘வாடிவாசல்’ வேண்டாம் என்று சூர்யா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதனால் ‘வாடிவாசல்’ கதையை அப்படியே வைத்துவிட்டு, வேறொரு படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருவதாகவும் இப்படத்தையும் தாணுவே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.