சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரக்கூடிய இளம் கதாநாயகர்களில் முதன்மையானவர் சிவகார்த்திகேயன். ’டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது கதைத் தேர்விலும் வித்தியாசம் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். ’டான்’, ’பிரின்ஸ்’ என வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ’மாவீரன்’ போன்ற பரிசோதனை முயற்சியான கமர்ஷியல் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடியவராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ’அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ’பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சுதா கொங்கரா இயக்கி வரும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. மிகுந்த பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும். ரவி மோகன், அதர்வா, பாசில் ஜோசப் ஆகிய நடிகர்களும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
1960 இல் தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகலாம் என கூறப்பட்டு வருகிறது. அப்படியான கதையாக இருக்கும்பட்சத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதை முதன்மைப்படுத்தி வருகிறார் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழு மறைமுகமாக தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்துடன் ’பராசக்தி’ திரைப்படம் மோதவுள்ளது.
இந்நிலையில் காரைக்குடி, மதுரை, பொள்ளாச்சி, இலங்கை என ’பராசக்தி’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 1999ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் வாலி திரைப்படத்தில் இடம்பெற்ற சோனா சோனா பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து பாடி மகிழ்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த வீடியோ வெளியான 2 மணி நேரத்திற்குள் 2.8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் இயக்குநர் மற்றும் பாடகர் அருண் ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயனின் நண்பர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த வீடியோவின் கேப்ஷனில், "நாங்க கும்பலாக சுத்துவோம், ஐயோ அம்மான்னு கத்துவோம்" என கானா பாடலின் வரிகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயன் சோனா சோனா பாடலின் இசையமைப்பாளர் தேவா, பாடகர் ஹரிஹரன் ஆகியோரிடம் கேப்ஷனில் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த வீடியோவானது பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதையும் அந்த கேப்ஷனில் குறிபிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இதுவரை திரைப்படங்களில் 11 பாடல்களை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: 'வெயில்' திரைப்படத்தில் தவறு செய்து விட்டேன்! 19 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்!
‘மாவீரன்’, ’ரஜினி முருகன்’ என அவர் நடித்த படங்கள் மட்டுமல்லாது அவர் நடிக்காத படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். அஜித்தின் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த சமயத்தில் அஜித்தின் படத்திலிருந்து ஒரு பாடலை பாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.