சென்னை: தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அடையாளம் பெறும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்றுள்ளது. 1990களில் யுவன் ஷங்கர் ராஜா, 2000ற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார், 2012ற்கு பிறகு அனிருத் என இதற்கு வெற்றிகரமான உதாரணங்களும் உண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் சாய் அபயங்கர்.
தன்னுடைய 18 வயதில் சுயாதீன பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாய் அபயங்கர். தற்போது தன்னுடைய 20 வயதிற்கும் மிகப் பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கனவே மூன்று பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் நான்காவதாக மிகப்பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இணையவுள்ள திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி பாடகர்களாக நிறைய ஹிட் பாடல்களை பாடிய பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி தம்பதியின் மகன் தான் சாய் அபயங்கர். சிறு வயதில் இருந்தே இசை பயின்று வந்த சாய் அபயங்கர் தற்போது இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தன்னுடைய 18 வயதில் ’கட்சி சேர’ எனும் சுயாதீன பாடலை இசையமைத்து வீடியோ வெளியிட்டார். அதில் இருந்து இளைஞர் பட்டாளத்தின் விருப்பமான இசையமைப்பாளராக மாறிவிட்டார். தொடர்ந்து ’ஆசை கூட’, ’சித்திரி புத்திரி’ என சுயாதீன பாடல்களை வெளியிட்டார். இவையும் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து இவரை தேடி திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கின. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகும் ’பென்ஸ்’ படத்தின் மூலம் சாய் அபயங்கரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். ’பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படம் வெளியாவதற்குள்ளே அதற்குள்ளாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 45’ திரைப்படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகிவிட்டார் சாய் அபயங்கர். முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் திடீரென விலகியதை அடுத்து சாய் அபயங்கருக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் புதிதாக நடித்து வரும் அவருடைய நான்காவது படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். இப்படத்தை சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மூன்று படங்களில் இசையமைப்பது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன.
இதையும் படிங்க: ”இந்திய அரசு தடை செய்த ’சந்தோஷ்’ படத்தை திரையிட சிறைக்கு செல்ல தயார்”... பா.ரஞ்சித் பேச்சு!
இந்நிலையில் இயக்குநர் அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே தொடர்ந்து நான்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் கூட இப்படி இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.