சென்னை: ஹாலிவுட் திரையுலகில் நடிப்பிற்காக கொண்டாடப்படும் நடிகர்களில் மிக முக்கியமானவர் ராபர்ட் டி நீரோ (Robert De Niro). ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான இவர் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். ‘ரேஜிங் புல்’, ‘காட்ஃபாதர் 2’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘குட்ஃபெல்லாஸ்’, ‘ஐரிஷ்மேன்’ போன்ற மிக முக்கியமான படங்களில் இவர் தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட ராபர்ட் டி நீரோ, 2025ஆம் ஆண்டுக்கான 78வது கான் திரைப்பட விழாவில் (Cannes Film Festival), வாழ்நாள் சாதனையாளருக்கான Palme d'Or விருதை பெற்றுக்கொள்கிறார். வருகிற மே 13ஆம் தேதி நடைபெறவுள்ள கான் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
81 வயதான ராபர்ட் டி நீரோவிற்கும் கான் திரைப்பட விழாவிற்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. 33வது வயதில் முதன்முதலாக கான் திரைப்பட விழாவில் பங்கேற்ற இவர், பிறகு பல தசாப்தங்களாக தான் பங்கெடுத்த படைப்புகளுக்காக கலந்து கொண்டுள்ளார்.
1976ஆம் ஆண்டில் பெர்னார்டோ பெர்டோலுச்சியின் (Bernardo Bertolucci's) 1900 திரைப்படம் மற்றும் மார்டின் ஸ்கார்ஸஸியின் ’டாக்ஸி டிரைவர்’ (Taxi Driver) ஆகிய இரண்டு படங்களுக்காக கான் திரைப்பட விழாவில் பங்கேற்றார். அதில் ’டாக்ஸி டிரைவர்’ திரைப்படம் Palme d'Or விருதை வென்றது.

1983ஆம் ஆண்டில் ’தி கிங் ஆஃப் காமெடி’ (The King of Comedy), அதற்கடுத்து 1984ஆம் ஆண்டு ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’ (Once Upon a Time in America), 1986ஆம் ஆண்டில் ’த மிஷன்’ (The Mission) ஆகிய படங்களுக்காக மீண்டும் மீண்டும் கான் திரைப்பட விழாவில் பங்கேற்றார். த மிஷன் திரைப்படம் மீண்டும் Palme d'Or விருதை வென்றது.
2011ஆன் ஆண்டில் ராபர்ட் டி நீரோ கான் திரைப்பட விழாவின் நடுவராக பதவி வகித்தார். கடைசியாக 2023ஆம் ஆண்டு மார்டின் ஸ்கோர்சஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon) படத்திற்காக கான்ஸ் விழாவில் பங்கேற்றார்.
2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் கான் திரைப்பட விழாவில் வருகிற மே 14ஆம் தேதி டெப்யூசி திரையரங்கில் (Debussy Theatre) நடைபெறும் மாஸ்டர்கிளாஸ் நிகழ்ச்சியில், நடிப்பு குறித்து தனது அனுபவங்களை பகிர உள்ளார் ராபர்ட் டீ நீரோ.

இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன்... மருத்துவமனையில் அனுமதி!
"கான் திரைப்பட விழாவுடன் எனக்கு மிக நெருக்கமான உணர்வுகள் உள்ளன," என்று ராபர்ட் டி நீரோ தெரிவித்துள்ளார். "கதை சொல்லிகள், திரைப்பட இயக்குநர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என உலகில் நம்மை பிரிக்கும் பல விஷயங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில், கான் திரைப்பட விழா நம்மை ஒன்றிணைக்கிறது. கான் திரைப்பட விழாவிற்கு செல்வது என்பது வீடு திரும்புவது போன்ற உணர்வு” என கூறியுள்ளார்.