சென்னை: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ’டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதல் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. கோடை விடுமுறை என்பதால் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜிவிந்த் இயக்கியுள்ள இத்திரைப்படமானது இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பி வரும் ஒரு குடும்பம் சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் அதனை அந்த குடும்பம் கையாளும் விதத்தையும் நகைச்சுவையாக பேசுகிறது ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்.
நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இந்த கருத்தை பேசியிருப்பதால் சமூக வலைதளங்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். திரை பிரபலங்கள் மட்டுமல்லாது அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல் ஆளுமைகளும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.
ரஜினிகாந்த்தும் இத்திரைப்படத்தை சமீபத்தில் பாராட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சசிகுமார், “‘படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும்.
#TouristFamily #SuperStar #Rajinikanth sirrr 😍🤗 pic.twitter.com/jzYvGe5XlR
— M.Sasikumar (@SasikumarDir) May 16, 2025
‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டியவர் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, “சூப்ப்ப்பர் சசிகுமார்” என அழுத்திச் சொன்னார். “தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கிறீர்கள். சொல்ல வார்த்தையே இல்லை, அந்தளவுக்கு வாழ்ந்திருக்கிறீர்கள். பல காட்சிகளில் கலங்கடித்துவிட்டீர்கள்.
சமீபகாலமாக உங்களுடைய கதைத் தேர்வு வியக்க வைக்கிறது சசிகுமார்” என அவர் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினிகாந்த் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவிற்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மகனை வைத்து ரமணா 2 திரைப்படம்... ’படை தலைவன்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!
’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் சசிகுமார், சிம்ரனுடன் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.