சென்னை: கடந்த ஆண்டு வெளியான ’விடுதலை இரண்டாம் பாகம்’ திரைப்படத்தை அடுத்து தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக தெலுங்கின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்த படத்தைப் பற்றி ஒவ்வொரு அறிவிப்பாக தற்போது வந்து கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியை இதுவரை யாரும் பார்த்திராத கதாபாத்திரத்தில் பூரி ஜெகன்நாத் காட்சிப்படுத்தவுள்ளார் என அறிவித்துள்ளார். இந்த படத்தில் பணியாற்ற உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இருவரும் இணைந்து இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இந்த ஆண்டு ஜுன் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் படத்தில் உள்ள மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இவர் தான் விஜய் சேதுபதியின் ஜோடியா அல்லது தபு ஜோடியாவாரா என தெரியவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான தோனி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராதிகா ஆப்தே, ஹிந்தியில் மிக முக்கியமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஜோடியாக அவர் நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமானார். தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும் அவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கும் என ரசிகர்களிடையே எண்ணம் உள்ளது. அதற்கேற்ப வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ராதிகா ஆப்தே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானதாகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் அவருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் நந்தா!
தற்போது பூரி ஜெகன்நாத் படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான 'மஹாராஜா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது சீனாவில் கூட வசூல் சாதனை படைத்தது.
விடுதலை திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, ஆறுமுக குமார் இயக்கத்தில் ’ஏஸ்’, மிஷ்கின் இயக்கத்தில் ’ட்ரெய்ன்’, பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ’ஏஸ்’ திரைப்படம் விரவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற படங்கள் எப்போது வெளியாகும் என எந்த அறிவிப்பும் இப்போது வரை இல்லை.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.