சென்னை: தமிழ் சினிமாவில் தன்னுடைய புதுமையான முயற்சிகளாலும் அசாத்திய திறமையாலும் தனக்கென தனித்த இடத்தை பிடித்தவர் இயக்குநர் பார்த்திபன். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் புறம்தள்ள இயலாத கதாபாத்திரங்களை நம்மிடையே உலவ விட்டவர். 1989ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படமான புதிய பாதை திரைப்படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர்.
தொடர்ந்து அதனை செய்துகொண்டே இருக்கிறார். கடைசியாக டீன்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதற்கு முன்பு முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட இரவின் நிழல் எனும் படத்தை உருவாக்கினார். இவ்வாறு உண்மையாகவே பல்வேறு புதுமையான படங்களை உருவாக்கியவர் பார்த்திபன்.
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படமானது பார்த்திபன் இயக்கி நடித்த படங்களில் இன்னும் வித்தியாசமானது. ஏனென்றால் மொத்த படத்திலும் அவர் ஒருவர் தான் நடித்திருப்பார். அதற்காக வேறு கதாபாத்திரங்கள் இல்லை என்று இல்லை. மற்ற கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு காட்டாமல் அவர்களின் குரல் மூலம் மட்டுமே கதை சொல்லி மொத்த கதையிலும் பார்த்திபனின் ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே நம்மிடையே உரையாடும் வகையில் உருவாக்கியிருப்பார்.
'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் பல பிரிவுகளின் கீழ் எண்ணற்ற விருதுகளை தட்டி சென்றது. தனியார் நிறுவனம் மூலம் பல இடங் களில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் மாசிலாமணி ஒரு கொலை செய்து விட்டதாக கைதாகி காவல்துறையில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார், இதுதான் மொத்த திரைப்படம்.
எனக்கு கௌரவம் தந்த படம் இது,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 6, 2025
ஏன்?
நீங்களே பாருங்கள்...
.
.
.
From Tomorrow 6pm " oththa seruppu size 7" streaming on our youtube channel @radhakrishnan_parthibanhttps://t.co/6SLsWdSupY pic.twitter.com/rpsFZyn0mW
விசாரணை செய்யப்படும் மாசிலாமணியாக பார்த்திபன் நடித்திருப்பார். இதுவரையில் யாரும் யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு அபூர்வமான சவாலான ஒரு திரைக்கதை. படம் முழுக்க திரையில் தோன்றும் ஒன்லி கதாபாத்திரமாக பார்த்திபன். அவரின் மனைவி, மகன், காவல் நிலை ஆய்வாளர், உயரதிகாரி, பெண் காவலர் என அனைவரும் திரையில் தோன்றாமல் குரல் வழியாக மட்டுமே கற்பனை மூலம் விரிவடைந்து கதை சொல்லியிருப்பார்.
இப்படம் இந்தியில் பார்த்திபன் இயக்க அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அதன் பின் படத்தை பற்றி எதுவும் தெரியவில்லை. அடுத்த கட்டமாக இப்படம் ஹாலிவுட்டில் உருவாக பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை பார்த்திபன் தனது yஊடியூப் பக்கத்தில் அனைவரும் காணும் வகையில் இலவசமாக வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி படம் வெளியிடப்படும் என முன்பு அறிவித்திருந்த நிலையில் அதனை செயல்படுத்தியுள்ளார்.
பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ போன்ற அவரது சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில் உள்ளடக்கம், உருவாக்கம், சுவாரஸ்யம் ஆகியவற்றுடன் உள்ளத்தைத் தொடுவதிலும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை யூடியூப்பில் தற்போது காணலாம்.