சென்னை: 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மிகக்கடுமையாக நிலவி வந்த சாதியத்தையும் பாலின சமத்துவமின்மையையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்த இணையர்களான சாவித்ரிபாய் பூலே மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'பூலே' (Phule).
சாதியம், பெண்ணடிமைத்தனம், குழந்தை திருமணம், மூடநம்பிக்கை, பெண்கள் மற்றும் பட்டியல் இன மக்களுக்கான கல்வி, உரிமைகள் என 19ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மிக அடிப்படையான பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளையும் முன் வைத்தனர் ஜோதிராவ் மற்றும் சாவித்ரிபாய்.
இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கென தனி கல்விகூடத்தை சாவித்ரிபாய் பூலே நிறுவினார். பெண் கல்வியின் முன்னோடியாக சாவித்ரிபாய் பூலே இன்றும் நினைவுகூறப்படுகிறார்.
ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பிரதீக் காந்தி (Pratik Gandhi) ஜோதிராவ் பூலே கதாபாத்திரத்திலும் பத்ரலேகா (Patralekha) சாவித்ரிபாய் பூலே கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்திய சமூகத்தில் தேசத்தந்தை காந்திக்கு முன்பே மகாத்மா என அழைக்கப்பட்டவர் ஜோதிராவ் பூலே. நேற்றைய தினம் (ஏப்ரல்.11) பூலே மகாத்மா ஜோதிராவ் பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு பூலே திரைப்படம் திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக வெளியீடு இரண்டு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினரை இத்திரைப்படத்தில் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில அமைப்புகளும் படம் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். தணிக்கை வாரியம் படத்திற்கு முதலில் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் யூ சான்றிதழ் வழங்கியிருந்தது.
அதன் பின்பு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சாதி, வர்ணம் தொடர்புடைய வசனங்களையும் காட்சிகளையும் மாற்ற வேண்டும் எனவும் மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என பூலே திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது தணிக்கை வாரியம்.
இத்தகைய மாறுதல்களை செய்ய வேண்டியிருப்பதால் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவிருந்த பூலே திரைப்படம் தற்போது ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கான புரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர் நேற்று மகாத்மா ஜோதிராவ் பூலே பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்றுள்ளனர்.
படத்திற்கு நிலவும் எதிர்ப்பு பேசிய இயக்குநர் ஆனந்த் மகாதேவன், “டிரெய்லரை மட்டும் பார்த்து பலரும் தவறான கண்ணோட்டத்திற்கு சென்று விட்டனர். எந்த சமூகத்தையும் புண்படுத்தும்விதமாக படம் இருக்கிறது.
இதையும் படிங்க: ”சர்க்கஸ் பார்ப்பது போல இருக்கிறது”... தோனியை மறைமுகமாக தாக்கிய நடிகர் விஷ்ணு விஷால்!
முழுக்க முழுக்க வரலாற்று உண்மைத் தரவுகளின் அடிப்படையிலேயே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தான் இத்திரைப்படத்தை உருவாக்குவதில் இருந்த கடுமையான சவாலும் கூட. சினிமாவிற்காக எதையும் நாங்கள் மாற்றவில்லை” என கூறியுள்ளார்.
’பாபநாசம்’, ’2.0’ ஆகிய படங்களில் ஆனந்த மகாதேவன் நடித்துள்ளார். சமீபமாக, பாலிவுட்டில் வெளிவந்த விக்கி கௌஷாலின் ’சாவா’ (Chaavaa) படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் அதற்கு தணிக்கை வாரியம் பெரியளவில் மாறுதல்கள் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.