சென்னை: 'லூசிஃபர்’ (Lucifer) திரைப்படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் பிருத்விராஜ். 'எம்புரான்' திரைப்படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான முன் வெளியீட்டு பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் முதன்முறையாக ஆன்லைனில் அதிகபட்ச டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக எம்புரான் மாறியுள்ளது. BookMyShow தளத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது எம்புரான் திரைப்படம்.
நாளை படம் வெளியாகவிருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது எம்புரான் திரைப்படம். மார்ச் 21ஆம் தேதி அன்று தொடங்கிய முன் டிக்கெட் முன்பதிவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சால்க்னிக் இணையதளத்தின் அறிக்கையின்படி, முதல் நாளிலேயே 6,28,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
தொடர்ந்து இரண்டாம் நாள் 1,63,000 டிக்கெட்டுகளும் மூன்றாம் நாள் 1,10,000 டிக்கெட்டுகளும் நான்காம் நாள் 1,00,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிக்கெட் முன்புதிவு வாயிலாக மட்டும் உலக அளவில் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 26, 2025
மேலும் டிக்கெட் முன்பதிவின் மூலம் மட்டுமே எம்புரான் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான ஆஷிர்வாத் சினிமாஸ் அறிவித்துள்ளது. இதுவரை எந்த மலையாள திரைப்படமும் இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்ட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படம் வெளியாக இருப்பதால் இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எம்புரான்’ திரைப்படத்தில் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித், அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, கிஷோர், சானியா ஐயப்பன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. படத்தை இயக்கிய பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் டூ உதவி இயக்குநர்... மனோஜ் பாரதிராஜாவின் இயக்குநர் ஆசை!
மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. ’Game of Thrones’ வெப் சீரிஸில் நடித்த ஜெரோம் ஃப்ளின் போன்ற ஹாலிவுட் நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். உலகின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு என மலையாள திரையுலகின் மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முதல் பாகத்திற்கு திரைக்கதை எழுதிய முரளி கோபி இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.