சென்னை: சமீபத்தில் மலையாள திரையுலகில் இருந்து பிரம்மாண்ட படைப்பாக உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ’எல் 2: எம்புரான்’ (L2: Empuraan). மலையாளத்தின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான ’லூசிஃபர்’ திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் இரண்டாம் பாகமாக உருவான ’எம்புரான்’ திரைப்படம் வெளியான நாள் முதலே வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஒரு பக்கம் வசூல் சாதனை படைத்தாலும் ’எம்புரான்’ திரைப்படம் வெளியானதில் இருந்து சர்ச்சைகளும் அதிகமாக வளர்ந்து வந்தன. திரைப்படத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம், இந்திய ராணுவத்தை அவமதித்தல் மற்றும் குறிப்பிட்ட மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் படத்தில் பல்வேறு காட்சிகள் வெட்டப்பட்டன. ஏறக்குறைய 3 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனாலும் சர்ச்சை குறையவில்லை.
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவை வரை அழுத்தம் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து படத்தில் சர்ச்சைக்குரிய முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் படத்தின் இயக்குநர் பிருத்விராஜுக்கும் தயாரிப்பாளருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை.
எம்புரான் வெளியான முதல் இரண்டு நாளிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து மலையாளத் திரையுலகில் குறைவான நாட்களில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. தற்போது சால்க்னிக் இணையதள அறிக்கையின்படி இந்திய அளவில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ’எம்புரான்’ திரைப்படம்.
உலக அள்வில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி 11 நாட்களுக்குள்ளாகவே உலகளவில் 2500 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது ’எம்புரான்’. இதன் மூலம் மலையாளத் திரையுலகில் இதற்கு முன் அதிக வசூல் செய்த ’மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manjummel Boys). படத்தின் சாதனையை முறையடித்து முதல் இடம் பெற்றுள்ளது ’எம்புரான்’.
Malayalam cinema breaches the 250 cr barrier for the first time in its history!
— Aashirvad Cinemas (@aashirvadcine) April 6, 2025
The Emperor and his General navigating never seen before territory! #L2E #Empuraan @mohanlal @PrithviOfficial #MuraliGopy @antonypbvr @aashirvadcine @GokulamGopalan @GokulamMovies #VCPraveen… pic.twitter.com/NgRjccviSo
கடந்த ஆண்டு வெளியான ’மஞ்சும்மல் பாய்ஸ்’ உலகம் முழுவதும் 241 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாளத்தின் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்திருந்தது. இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படம் தான் 2023 ஆம் ஆண்டு வரை மலையாள திரையுலகின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கவிழ்ந்து விழுந்த அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’ கட் அவுட்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித், Game of Thrones’ வெப் சீரிஸில் நடித்த ஜெரோம் ஃப்ளின், சூரஜ் வெஞ்சரமூடு, கிஷோர், சானியா ஐயப்பன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். படத்தை இயக்கிய பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகத்திற்கு திரைக்கதை எழுதிய முரளி கோபி இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ‘எம்புரான்’ திரைப்படமானது மலையாளம் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளதால் எளிதாக 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.