ஹைதராபாத்: உலக அழகிப் போட்டியாளர்கள் தெலங்கானா மாநில தலைமை செயலகத்தை நேற்று (மே 18) பார்வையிட்டனர். தெலங்கானா மாநில அரசு அழகிப் போட்டியாளர்கள் அடங்கிய குழுவிற்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நோக்கத்துடன் கூடிய அழகு' என்பதை மையமாக வைத்து நடைபெறும் இந்த 72-வது உலக அழகிப் போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மூன்றாவது முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த உலக அழகிப் போட்டி, தெலங்கானா அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 போட்டியாளர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர்.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 2023ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தினி குப்தா பங்கேற்கிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் வந்துள்ளதால் தெலங்கானா சர்வேதச கலாச்சார மையமாக மாறியுள்ளது.
இந்திய கலச்சாரத்தையும் பண்பாட்டையும் புரிந்து கொள்ளும் விதமாக தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு வரும் உலக அழகிப் போட்டியாளர்கள் முக்கியமாக ஹைதராபாத் நகரத்தின் விருந்தோம்பலில் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் உலக அழகிப் போட்டியாளர்கள், நேற்று (மே 18) தெலங்கானா மாநில தலைமை செயலகத்தைப் பார்வையிட்டனர். உலக அழகி போட்டியாளர்களுக்கு தெலங்கானா அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அழகிப் போட்டியாளர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
தெலங்கானா தலைமை செயலக கட்டிடத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பின்பு மிஸ் இந்தியா நந்தினி குப்தா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தெலங்கானா அன்னையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியில் ரகளை செய்தனர்.
உலக அழகிப் போட்டியாளர்களின் வருகையை முன்னிட்டு, மாநில அரசு தெலங்கானா சிறப்பு உணவுகளுடன் கூடிய தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அழகிகள் அனைவரும் தெலங்கானா உணவு வகைகளை ருசித்தனர். இறுதியில், ஆயிரம் ட்ரோன்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்கவர் சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சியை உலக அழகிப் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: சூர்யாவின் ’ரெட்ரோ’ வசூல் எவ்வளவு...? ட்விஸ்டுடன் அறிவித்த படக்குழு!
தெலங்கானா அன்னையின் படம் ட்ரோன்கள் மூலம் திறக்கப்பட்டது. தெலங்கானாவின் கலாச்சார மரபுகளை நிலைநிறுத்தம் வண்ணம் பல்வேறு வடிவங்களில் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜூபல்லி கிருஷ்ணாராவ், தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறுகையில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு மாநிலத்தை நிர்வகித்து வருகிறது. தெலங்கானாவின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி உலகம் அறியும் வகையில், தூதர்களாக விளம்பரப்படுத்துமாறு உலக அழகி போட்டியாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, உலக அழகிப் போட்டியாளர்கள் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள தெலங்கானா ஒருங்கிணைந்த காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.