என்னை சார்ந்த சமூகத்திற்கு எடுக்கப்பட்டது தான் ’பைசன்’ - இயக்குநர் மாரி செல்வராஜ்!
நான் திரைப்படத்துறைக்கு வந்து பணம், புகழ் எல்லாம் சம்பாதித்து விட்டேன். இருந்த போதிலும் என் மண்ணிற்காக, மக்களுக்காக செய்திருக்கக் கூடிய படம் ’பைசன்’ என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார்.

Published : October 13, 2025 at 2:13 PM IST
சென்னை: என்னை சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ’பைசன்’ என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ’பைசன்’ திரைப்படம் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம், அமீர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நிகழ்ச்சியில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன், “சில வருடங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் தரப்பில் இருந்து ’பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதில் என்னால் நடிக்க முடியவில்லை. அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.
’பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்த பிறகு நான் மாரி செல்வராஜின் மிகப் பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். பிரேமம் படம் சமயத்தில் நடந்த ஒரு அற்புதம் போல், எனக்கு இப்போது ’பைசன்’ படத்தில் நடந்தது. இதற்குப் பிறகு பைசனுக்கு முன் அனுபமா, பைசனுக்கு பிறகு அனுபமா என என்னை பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் துருவ் விக்ரம்
நடிகர் துருவ் விக்ரம் பேசுகையில், ”இயக்குநர் அமீர் சாரை சின்ன வயசுல இருந்தே தெரியும். உங்களுடைய ’பருத்தி வீரன்’ திரைப்படம் இப்படத்திற்கு ஒரு பாடமாக அமைந்தது. மேலும் ’வடசென்னை’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் நீங்கள் இருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக தோன்றுகிறது. அதே போல பசுபதி சார் ’தூள்’ படத்தில் அப்பாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். பிறகு ’மஜா’ படத்தில் அப்பாவுக்கு அண்ணனாக நடித்திருந்தார். இப்படத்தில் எனக்கு தந்தையாக நடிப்பது நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
பிறகு துருவ் விக்ரம் தனது தந்தை நடிகர் விக்ரம் குறித்து, பேசுகையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். “கஷ்டமான காட்சிகள் நடிக்கும் போது அப்பா என் மனதில் இருப்பார். மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க நான் பத்து வருடம் கூட காத்திருப்பேன். அப்படி ஒரு இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தால், இன்னும் வேற லெவலில் வந்திருக்கும். அவர் நடிப்பதில் ஒரு பத்து சதவீதம் நான் நடித்தாலே போதும் என மட்டும் தான் நினைத்தேன். மற்றபடி மாரி செல்வராஜ் டேக் ஓகே சொன்னாலே எனக்கு வாழ்க்கையில் ஏதோ சாதித்தது போல் இருக்கும்” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ”சிறுவனாக இருந்த போது கணேசன் என்பவர் கபடி விளையாட்டில் எனக்கு மிகப்பெரிய முன்னோடியாக இருந்தவர். நான் திரைப்படம் எடுக்க வந்ததற்கு பிறகாக அவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப் போகிறேன் என அவரிடம் கேட்டதற்கு உடனே ஒப்புதல் அளித்தார். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கும் எங்களுடன் வந்து நிறைய உதவிகள் செய்துள்ளார். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படம் நான் எடுத்த காரணம், நான் சென்னை வந்து 20 வருடம் ஆகிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு முறை என்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி செல்லும் போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும். ஏனெனில் என்னுடைய உறவினர்கள் ஏதேனும் பிரச்சனை தொடர்பாக எனக்கு அனுப்பி விடுவார்களோ? ஊரில் என்ன பிரச்சனை வந்திருக்கிறதோ? என வாட் ஆப்பை பார்க்கவே எனக்கு பயமாக இருக்கும். அதனை எப்படி எதிர் கொள்வது என தெரியாமல் என்னை சார்ந்த சமூகத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ’பைசன்’.
இதையும் படிங்க: 'தேசிய தலைவர் - தேவர் பெருமான்' திரைப்பட விழாவில் யூடியூப் சேனல் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்
நான் திரைப்படத்துறைக்கு வந்து பணம், புகழ் எல்லாம் சம்பாதித்து விட்டேன். இருந்த போதிலும் என் மண்ணிற்காக, மக்களுக்காக செய்திருக்கக் கூடிய படம் ’பைசன்’. பைசன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்வதை விட இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் தான் எனக்கு பெருமை” என கூறியுள்ளார்.

