பெங்களூரு: 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “தமிழில் இருந்து வந்தது தான் கன்னடம்” என கமல்ஹாசன் பேசியதைத் தொடர்ந்து அவருக்கு கர்நாடகா முழுவதும் தீவிரமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் கமல்ஹாசன் தன்னுடைய கருத்திற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடாகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட சம்மேளம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். இறுதியாக, “நான் தவறாக கூறவில்லை என்றால், மன்னிப்பு கேட்கமாட்டேன்” என தெளிவாக தனது கருத்தை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதால் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று நேற்று (ஜூன் 2) தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது.
அதில், “கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது . திரையரங்குகளில் படம் தடையின்றி வெளியாவதை உறுதி செய்ய வேண்டும். திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என முறையிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் இலங்கை தமிழராக சசிகுமார்... வெளியான ’ஃப்ரீடம்’ டீசர்!
இந்த மனுவை இன்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மொழி குறித்து பேசுவதற்கு நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? அல்லது வரலாற்று ஆய்வாளரா? தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கூற உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? என கேள்விகள் எழுப்பியது. மேலும் மக்களின் மனம் புண்படும் வகையில் கமல் பேசி உள்ளார். யாராக இருந்தாலும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது.
கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும். நீர், நிலம், மொழி மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது. மொழியை சிறுமைப்படுத்தி விட்டு கமல்ஹாசன் நீதிமன்றம் வந்துள்ளார். கமல்ஹாசனின் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று மதியம் 2.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ’தக் லைஃப்’ திரைப்படமானது நாளை மறுநாள் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.