சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து ’தக் லைஃப்’ (Thug Life) படத்தை கடந்த 2023ஆம் ஆண்டு அறிவித்தார். அப்போது கமலுக்கும் 'விக்ரம்' திரைப்படம் மட்டுமே வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருந்தது.
இந்நிலையில் 1987ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைவதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ’தக் லைஃப்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவே ஆக்ஷன் காட்சியாக வெளியிடப்பட்டதால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கமல்ஹாசனும் மணிரத்னமும் பயங்கரமான ஆக்ஷன் திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளனர் என்பதே பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் ’தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். அவ்வகையில் ’தக் லைஃப்’ திரைப்படமானது ஜுன் 5, 2025 அன்று வெளியாகும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. படத்திற்கான போஸ்ட் புரொக்டஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர். இதில் அலி பைசல், 'மிர்சாபூர்' என்ற வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்றவர். இவர் தவிர, மராத்தி நடிகர்கள் பலரும் படத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னை, கோவா உள்பட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் சிலம்பரசனின் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
சமீபத்தில் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து தற்போது ’தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ’பந்தலுக்கு ஈசான மூலை’ என்கிற பாடல் வரிகளைக் குறித்து கமல்ஹாசன் கேட்கிறார்.
கமல்ஹாசன் குரலில் இப்பாடல் உருவாகலாம் என வீடியோ மூலம் தெரிகிறது. இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் இப்பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான ’மெய்யழகன்’ திரைப்படத்திற்காக யாரோ இவன் யாரோ பாடலை பாடியிருந்தார் கமல்ஹாசன். அவரது குரலில் வெளியாகும் பாடல்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
கமல்ஹாசனுக்கு கடைசியாக ’இந்தியன் 2’ படம் வெளியானது. ஆனால் அப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் ’இந்தியன் 3’ படம் திரையரங்குகளில் வெளிவருமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ’ரெட்ரோ’ பாடலுக்கு நடனம் ஆடிய சந்தோஷ் நாரயணன்... வெளியானது சூர்யாவின் ’கனிமா’ பாடல்!
முன்னதாக ’தக் லைஃப்’ படத்தில் ரவி மோகன், துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகி விட்டனர். இந்த ஆண்டு பிரபல நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.
ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அஜித் குமார் நடித்த ’குட் பேட் அக்லி’, மே 1ஆம் தேதி அன்று சூர்யாவின் ’ரெட்ரோ’ திரைப்படம். ஜூன் 5ஆம் தேதி கமல்ஹாசனின் ’தக் லைஃப்’ என இந்த ஆண்டு முழுக்க பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன.