சென்னை: ஏறக்குறைய 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ள ’தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேது படம் வெளியாகவுள்ள நிலையில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து ’தக் லைஃப்’ (Thug Life) உருவாக்கியுள்ளார். கமலும் 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இது. 1987ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைவதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர். இதில் அலி பைசல், 'மிர்சாபூர்' என்ற வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்றவர். இவர் தவிர, மராத்தி நடிகர்கள் பலரும் படத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னை, கோவா உள்பட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் முதல் பாடல் வெளியீட்டையே பிரம்மாண்டமான விழாவாக நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.
’ஜிங்குச்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன், வைஷாலி மற்றும் ஆதித்யா ஆர்.கே ஆகியோர் பாடியுள்ளனர். திருமண வீட்டில் நடைபெறும் கொண்டாட்ட பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. பாடலின் லிரிக் வீடியோவில் சான்யா மல்ஹோத்ரா தான் முழுக்க நடனமாடுகிறார்.
திருமணத்தின் கொண்டாட்டங்களையும் மகிழ்வையும் தனது வரிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். இப்பாடலில் கமல்ஹாசன், சிலம்பரசன் உட்பட அனைத்து நடிகர்களுமே திருமண கொண்டாட்ட நிகழ்வில் வண்ணமயமான ஆடைகளுடன் காட்சியளிக்கின்றனர். லிரிக் வீடியோவின் இறுதியில் கமல்ஹாசனும் சிலம்பரசனும் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
இதையும் படிங்க: ”வதந்திகளை பரப்ப வேண்டாம்”... நடிகர் ஸ்ரீயை கண்டுபிடித்த லோகேஷ் கனகராஜ்!
இப்பாடல் மணிரத்னத்தின் முந்தைய படங்களில் இடம்பெற்ற யாரோ யாரோடி, சரட்டு வண்டியில் போன்ற பாடல்களை ஒத்துள்ளது. மேலும் இப்பாடல் ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவே பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியாக இருந்தது. இப்போது முழுக்க முழுக்க கொண்டாட்ட பாடல் வெளியாகியுள்ளது.
ஆதலால் இத்திரைப்படம் குடும்பம் சார்ந்த ஆக்சன் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ’தக் லைஃப்’ படத்தில் ரவி மோகன், துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகி விட்டனர். இந்த ஆண்டு பிரபல நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.