சென்னை: தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’. இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அஜித் ரசிகர்களிடையே கொண்டாட்டமான திரைப்படமாக மாறியது.
இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. இதுவரை உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
’நாட்டுப்புற பாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பல ரெட்ரோ பாடல்கள் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களும் இளையராஜா இசையயில் உருவான பாடல்கள்.
இதனால் தான் இளையராஜா குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், தன்னுடைய அனுமதி இல்லாமல் மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். மேலும் அந்த மூன்று பாடல்களை திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இது தான் இசையமைத்த ஒரிஜினல் பாடலின் தன்மையை தடுக்கும் விதமாக இந்தப் பாடல்கள் அமைந்திருப்பதாக கூறியுள்ளார். பின்பு நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நோட்டீஸ் அனுப்பபட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கும் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் பட இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்... தமிழ் திரையுலகினர் அஞ்சலி!
இதே போன்று கடந்த ஆண்டு இணையத்தில் வெளியான ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜாவின் பழைய பாடலான ’வா வா பக்கம் வா’ பாடலை ஒத்த இசையை பயன்படுத்தப்பட்டதால் அதன் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ’மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடலான ’கண்மணி அன்போடு’ பாடலுக்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் முழுக்க முழுக்க பல்வேறு பழைய பாடல்கள் முழுதாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவை தான் அந்த படத்தை கொண்டாட்டமானதாக மாற்றியதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.