சென்னை: தமிழ் சினிமாவின் யாதர்த்த திரைப்படங்களின் மீது பார்வையாளர்களின் கவனத்தை திருப்பிய குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் வசந்த பாலன். அவரது 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளாக இருக்கின்றன.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு 'வெயில்' படத்தில் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குநர் வசந்த பாலன். பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘பி.கே.ரோஸி திரைப்பட விழா’ ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி நேற்று 6ஆம் தேதி வரை நடைபெற்றது.
விழாவில் வசந்த பாலன் பேசியதாவது, “ஒரு பழைய கதை தான். என்னுடைய முதல் படம் சரியாக ஓடவில்லை. நான் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். கமர்சியல் உலகத்தில் பெரிய இயக்குநர் அவர். என்னை சுற்றி இருக்கிற மொத்த உலகமும் ஒரு கமர்சியல் உலகத்திற்குள் இயங்கி கொண்டிருந்தது. 'தில்', 'தூள்', 'சாமி' மாதிரியான படங்கள் வந்து கொண்டிருந்தன.
நான் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். திருமணம் ஆகவில்லை , வயது 31 ஆகியிருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தேன். நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன்? எதற்காக இங்கே வந்தேன்? என எனக்கே கேள்விகள் வந்தன. பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா இவர்களின் படங்கள் தான் என்னை சினிமாவிற்கு இழுத்து வந்தததை நினைவுபடுத்திக் கொண்டேன்.
அப்படியான படங்களை எடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அப்போது சென்னையில் ஒரு திரைப்பட விழா நடந்தது. அன்றைய கால கட்டத்தில் திரைப்பட விழா என்பது ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே போய் வரும் இடமாக இருந்தது. உலக சினிமாக்களை பார்க்க முடியாத காலகட்டம் அது. அதனால் அந்த திரைப்பட விழாவில் ஒரு நாளைக்கு திரையிடப்பட்ட 6 படங்களையும் பார்ப்பேன்.
அந்த திரைப்படங்களைப் பற்றி வீட்டிற்கு வந்து பேப்பரில் அந்த படங்களின் கதைகளை எழுதுவேன். அந்த கதைகள் எனக்கு ஏன் பிடித்தது என்பதை எழுதினேன். அதை எல்லாம் பார்த்த போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. எதற்காக நான் சினிமாவிற்கு வர நினைத்தேனோ அந்த ஆசையை விட்டுவிடக் கூடாது என்கிற நோக்கம் எனக்குள் உருவானது. அப்போது நான் எழுதிய கதைதான் வெயில் .
திரைத்துறை முழுக்க வெற்றி பெறும் கதாநாயகனின் வாழ்க்கையைச் சொல்லிய போது தோல்வியுற்றவனின் கதையை வெயிலின் சூட்டோடு சொல்ல ஆசைப்பட்டேன். முதல் படம் தோல்வியான எந்த இயக்குநருக்கும் இன்னொரு வாய்ப்பு எளிதில் கிடைக்காது. அப்படியான நேரத்தில் தான் ’காதல்’ படம் வெளியானது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’வெயில்’ படத்தின் கதையை ஷங்கர் சாருக்கு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த கதை அவருக்கு பிடித்திருந்தால் ஓகே. இல்லை என்றால் திரும்பி ஊருக்கு போய் விடலாம் என்று முடிவு செய்தேன். ஷங்கருக்கு கதை பிடித்திருந்தது. வித்தியாசமான கதைகளை தயாரிக்க வேண்டும் என்று அவர் ஆசைபட்டார். அவர் சூர்யா, அர்ஜுன் போன்ற கதாநாயகர்களை வைத்து எடுக்கலாம் என சொன்னார். பசுபதி போன்ற ஒரு திராவிட முகம் தான் நடிக்க வேண்டும் என சொன்னேன்.
தமிழில் இருந்து கான்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வான முதல் படம் ’வெயில்’. இந்த திரைப்படத்திற்கு தமிழ் திரையுலகின் பெரிய கதாநாயகர்களிடம் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால் அதை எதையும் ஒப்புக் கொள்ளாமல் நான் எடுத்த படம் தான் அங்காடி தெரு. அந்த திரைப்படமும் நிறைய திரைப்பட விழாக்களுக்கு சென்றது. கொண்டாடப்பட்டது. திரைப்பட விழாக்கள் தான் என்னை உருவாக்கியது.
இயக்குநர் பா.ரஞ்சித் வருவதற்கு முன்னால், பட்டியலின மக்கள் குறித்த பார்வை, சாதி பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறொன்றாக இருந்தது. நிஜமாகவே நாகராஜ் மஞ்சுளே வந்த பிறகு, பா.ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகு மாரி செல்வராஜ் நுழைந்த பிறகு அந்த மொத்த பார்வையும் மாறியது. ‘வெயில்’ படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் சித்தரிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும், அந்த கதாபாத்திரங்கள் சிறுபான்மையினராக, பட்டியலின மக்களாக மூன்றாம் பாலினத்தராக இருக்கும் பட்சத்தில் அதனை எப்படி அணுக வேண்டும் என்ற கவனத்தை மிக கூர்மையாக பா.ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்கள் வாயிலாக கொண்டு வந்துள்ளார். அதனை முக்கியமான மாற்றமாக பார்க்கிறேன்.
இதையும் படிங்க: அட்லியின் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
மொத்த தமிழ் சினிமாவிலும் அது மாறிவிட்டது. இப்போது வந்த பெரிய படத்தில் சின்னதாக தூய்மைப் பணியாளரை குறை சொன்னாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் எழுதும் அளவுக்கு அரசியல்படுத்தப்பட்டுள்ளனர். கலையின் முக்கியமான வேலை என்பது அரசியல் என நினைக்கிறேன்.
அந்த அகல் விளக்கை ரஞ்சித் அழகாக ஏற்றி வைத்துள்ளார். இயக்குநருக்கு ரஜினிகாந்த் படம் கிடைத்த பிறகு, பணம் வந்த பிறகு திருமண மண்டபம் கட்டலாம், பங்களா வாங்கலாம், ஆனால் பா.ரஞ்சித் கூகை நூலகத்தை கட்டியிருக்கிறார். மிகப் பெரிய விஷயம் இது. நான் உதவி இயக்குநராக இருந்த போது, 1200 ரூபாய் சம்பளம் என்றால் 1200 ரூபாய்க்கும் புத்தகம் வாங்கி படிப்பேன்.
நூலகத்தில் நாம் எதிர்பார்க்கும் புத்தகம் இருக்காது. உதவி இயக்குநராக இருப்பவருக்கு எந்த புத்தகத்தை படிக்கனும்? எந்த புத்தகத்தை படிக்கக் கூடாது? என்ன செய்யக்கூடாது? என்ற காலகட்டம் உருவாகியுள்ளது. கூகை ஒரு இயக்கமாக மாறியுள்ளது. இது ரொம்ப பெரிய விஷயம். இசைக்கு ஒரு விழா நடத்துகிறார்.
திரைப்படத்திற்கு ஒரு விழா நடத்துகிறார். ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஞ்சித்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக அரசியலை சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது” என்று பேசினார் இயக்குநர் வசந்தபாலன்.