சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான ’நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படமான ‘தக் லைஃப்’ இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஏறக்குறைய 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் ’தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனுடன் முதன்முறையாக சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியிட்டு விழாவில் 'தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என கமல்ஹாசன் கூறிய கருத்து கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’தக் லைஃப்’ திரைப்படம் அங்கு திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. அதனால் கர்நாடகாவைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும் மாநில எல்லையில் உள்ள தமிழ்நாடு திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்த்துச் செல்கின்றனர்.
கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழ்நாட்டில் ஆதரவு பெருகி வருகிறது. இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று தக் லைஃப் திரைப்படம் வெளியானதை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் ரசிகர்கள் காலையில் இருந்தே படத்தின் வெளியீட்டிற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பீரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதுமே ’தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியீட்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கில் ’தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டை நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
திரையரங்க வளாகம் முழுவதும் சிலம்பரசினின் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. தியேட்டரில் அமைக்கப்பட்ட சிலம்பரசன் கட் அவுட்டுக்கு தேங்காய் உடைத்தும் பாலாபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல யூடியூபர் மற்றும் நடிகரான கூல் சுரேஷ் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கையில் கமலஹாசன் மற்றும் சிலம்பரசன் புகைப்படங்களை ஏந்தியபடி வருகை தந்த அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதையும் படிங்க: ரோலக்ஸுக்கு போட்டியாக வால்டர்... லோகேஷ் கனகராஜின் LCUவில் மிரட்டலாக இணைந்த நிவின் பாலி!
ரசிகர்களின் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்பட்டதால் பல ரசிகர்களும் மாநில எல்லையில் உள்ள ஆந்திர மாநில திரையரங்குகளில் அதிகாலையே காட்சிகளை பார்த்தனர்.
மணிரத்னம் இயக்கியுள்ள ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.