மும்பை: தெலுங்கு திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குபேரா’ (Kuberaa). வருகிற ஜூன் 20ஆம் தேதி இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
’குபேரா’ படத்தின் வெளியீட்டிற்கு பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடும் விழா மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது. நாகர்ஜூனா, ராஷ்மிகா என படக்குழுவினர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தனுஷ், ”எல்லோருக்கும் வணக்கம்” என தமிழிலேயே பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து தமிழில், ”உங்களை எல்லாம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம், எனக்காக இங்கே வந்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என பேசினார். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசிய தனுஷ், “எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேச முடியும் அதுவும் அரைகுறையா தான் பேச முடியும். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
'குபேரா' மிகவும் வித்தியாசமான திரைப்படம். இது மற்றொரு திரைப்படம் என கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு ஸ்பெஷலான படம். மிகவும் நெருக்கமான படம். உடன் இருப்பவர்களும் அதை ஒப்புக் கொள்வார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது.
அதுபோல, வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. குப்பை கிடங்குகள், குப்பை வண்டிகள் என இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். நான் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பெரும்பாலும் வருவதில்லை. ஆனால் இந்த படம் அப்படி இல்லை. இதனை இப்படி விளம்பரப்படுத்துவது என்பது ரொம்பவே முக்கியமானது
குபேரா படத்தில் நான் ஒரு பிச்சைக்காரனாக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய ஆராய்ச்சி, ஹோம்வொர்க் செய்தேன், வெயிலில் நின்று நிறைய கஷ்டப்பட்டேன். ஆனால் நான் சொன்னவை அனைத்தும் பொய். நான் அப்படி எதுவும் செய்யவில்லை.
நேராக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று என் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்தேன். இயக்குநர் சேகர் எனக்கு கதாபாத்திரத்திற்கான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். எப்படி பேச வேண்டும் நடக்க வேண்டும் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அவர் எனக்கு என்னுடைய கதாபாத்திரத்தின் வாழ்க்கையை சுலபமாக கற்று கொடுத்தார்.
சேகர் கம்முலா அற்புதமான மனிதர். அவரைப் போல ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது. அவருக்காகவே இப்படத்தில் நான் நடித்தேன். சினிமா மீதான அவருடைய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தின் கதையை நான் வெறும் 20 நிமிடங்கள்தான் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
குபேரா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். என்னுடைய ஏழ்மையான கடந்த காலங்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச்சென்றது. நான் அடிக்கடி இப்படி புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை, ஆனால் குபேரா இப்படி விளம்பரப்படுத்தப்படுவதற்கு தகுதியான திரைப்படம்.
ஒரு குப்பை கிடங்கில் நானும் ரஷ்மிகாவும் இப்படத்தின் ஒரு காட்சிக்காக குப்பை கிடங்கில் நடித்தோம். கிட்டதட்ட 6 மணி நேரம் வரை அங்கே படப்பிடிப்பு நீண்டது. ராஷ்மிகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு அந்த இடத்தின் நாற்றம் இருந்தது. அவருக்கு அப்படி இல்லை. அப்படியான காட்சிகளில் சில நேரம் மாஸ்க் அணிந்திருப்போம். சில நேரங்களில் அணிந்திருக்கமாட்டோம். அது பிரச்னை கிடையாது.
ஆனால், இப்படத்தின் மூலம் இன்னொரு வாழ்க்கையை பார்க்க முடிந்தது. என்னுடைய தொடக்கமும் அப்படியான ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்ததுதான். நான் அப்படியான நிலைமையில் இருந்துதான் வந்திருக்கிறேன். இப்போது கடவுளின் அருளால் இங்கு நிற்கிறேன். மீண்டும் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கு இப்படம் அழைத்துச் சென்றது” என்று பேசினார்.
இதையும் படிங்க: வெற்றிமாறனுக்கு விளக்கமளித்த தணிக்கை வாரியம்... ’மனுஷி’ பட வழக்கில் நடந்தது என்ன...?
குபேரா திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் அவரே இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது மட்டுமல்லாமல் ஹிந்தியில் அவர் நடித்து வரும் ராஞ்சனாவின் இரண்டாம் பாகமான ’தேரே இஷ்க் மெய்ன்’ (Tere Ishk Mein) திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு வரிசையாக பட வெளியீட்டை வைத்திருக்கும் முன்னணி கதாநாயகன் பட்டியலில் தனுஷ் முதலில் இருக்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.