பெங்களூரு: ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்சிபி பெங்களூரு அணி நடப்பு ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது. 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் முயற்சி நிஜமான நிலையில் ஆர்சிபி அணியினர் நேற்று (ஜூன் 4) பெங்களூரு திரும்பினர். அவர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூரு அணி வீரர்களை வரவேற்க சின்னசாமி மைதானத்தில் சுமார் 2 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் மதியம் முதலே அங்கு திரண்டனர். அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் சின்னசாமி மைதானத்தின் நுழைவு வாயில்களில் நுழைய முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் நேரிட்டது. இதில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். எனினும் மயங்கி விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்துவிட்டு பலர் உள்ளே சென்றனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
Heart wrenching tragedy in Bangalore. Deeply distressed and my heart reaches out to the families of the victims in this moment of grief. May the injured recover soon.
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2025
இச்சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பெங்களூரில் நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டு இரங்கல் பதிவில், “வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் அன்புக்குரியவர்களின் மரணம் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்.

இதையும் படிங்க: திரையரங்குகளில் ’தக் லைஃப்’ கொண்டாட்டம்... சென்னையில் சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் மீண்டும் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். உங்களது பெருமையும் பற்றும் குடும்பத்தின் வலிக்கும் துன்பத்திற்கும் காரணமாக அமைந்துவிடக்கூடாது. உங்கள் பெருமையும் அன்பும் அனைவரையும் பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை உங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ பதிவை பகிர்ந்து நடிகர் மாதவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “இச்சம்பவம் இதயத்தை ரணப்படுத்தக்கூடியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இதயப்பூர்வமான ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சமயத்தில் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். முக்கியமாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.