முகில் தங்கம்
சென்னை: உலகம் முழுவதும் திரைப்படம் எனும் கலை வடிவத்தில் வணிக திரைப்படங்களே பெரும்பாலான மக்களுக்குப் பரீட்சயமானவை. அவற்றைத் தாண்டி உருவாக்கப்படும் சுயாதீன கலை திரைப்படங்கள் குறித்து வெகுஜன மக்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் அவை உலகளவில் கவனம் பெறக்கூடியவை. அதற்கான காரணம் திரைப்பட விழாக்கள்.
உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியமானதாக கொண்டாடப்படுவது கான் திரைப்பட விழா. இத்தகைய சிறப்புமிக்க திரைப்பட விழாவின் 'La Cinef' எனும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரிவில் இந்தியா சார்பாக ‘எ டால் மேட் அப் அஃப் வித் க்ளே ’(A Doll Made Up of Clay) எனும் குறும்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைகாட்சி பயிற்சி நிறுவனத்தின் மாணவர்களே இக்குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்திய சினிமாவிற்கே பெருமையான இத்தருணத்தில் இக்குறும்படத்தில் நடித்துள்ள நடிகை கீதா டோஷி (Geeta Doshi) குறும்படத்தின் அனுபவங்கள் குறித்தும் சுயாதீன கலை திரைப்படங்கள் குறித்தும் நம்முடன் உரையாடிய உரையாடலை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
”2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனோ லாக்டௌனுக்குப் பிறகே நடிப்பது குறித்த முடிவுகளை எடுக்கத் தொடங்கினேன். அதற்கு திரைப்படத்துறையிலேயே பணியாற்றி இருந்தாலும் தயாரிப்புத்துறை என கேமராவிற்கு பின்னால் தான் பணியாற்றியுள்ளேன். லாக்டௌனுக்குப் பிறகே நடிக்கலஆம் என தோன்றிய எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக நாடக அரங்கில் இணைந்தேன்.
அதன் பிறகு அங்கிருந்து படிப்படியாக திரைப்படத்துறையில் நுழைய ஆரம்பித்தேன். மற்ற நடிகைகளை ஒப்பிடும்போது எனது வயதும் ஒரு காரணமாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்து வரும் வாய்ப்புகளும் சிறப்பானதாகவே அமைந்து வருகிறது.” என தனது நடிப்பு பயணத்தை விளக்குகிறார் கீதா டோஷி.

”சிறு வயது முதலே ஏற்பட்ட ஓவியக்கலை ஈடுபாடு என்னை கலையின் பக்கமே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தியது. நடிப்பு கூட ஒரு இரவில் உடனடியாக நடக்கவில்லை. சிறு வயது முதலே நான் பார்த்து வியந்த கலையின் தாக்கமே என்னை இங்கே நிறுத்தியிருக்கிறது. நடிப்பது என முடிவு செய்தபோது கூட வணிக திரைப்படங்களைவிட சுயாதீன திரைப்படங்களே எனது விருப்பமாக இருந்தது.
வணிக திரைப்படங்களிலும் நடிக்காமல் இல்லை. ஆனால் மனதிற்கு நெருக்கமானவையாக கலை திரைப்படங்களே உள்ளன” என சுயாதீன திரைப்படங்களின் மீதான காதலை அழகாக விவரிக்கிறார் கீதா டோஷி.
உங்களது குறும்படம் கான் திரைப்பட விழாவில் தேர்வானது குறித்து அறிந்தபோது எப்படி இருந்தது என கேட்டதற்கு, “என்னுடைய தயாரிப்பாளர் இந்த செய்தியை என்னிடம் முதலில் கூறியபோது நான் முதலில் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் அதே செய்தியை திருப்பிக் கேட்டேன். அவர் கூறுவது உண்மை தான் என தெரிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
என்னுடைய படக்குழுவினர் அனைவரும் கான் திரைப்பட விழாவில் உள்ளனர். இது மிக மிக மகிழ்ச்சியான தருணம். மே 21ஆம் தேதி எங்களது குறும்படமான ‘எ டால் மேட் அப் அஃப் வித் க்ளே ’(A Doll Made Up of Clay) அங்கே திரையிடப்படுகிறது. எனது நடிப்பு பயணத்தில் மிக முக்கியமான தருணமாகும்” என பதிலில் அத்தனை மகிழ்ச்சி.
“இந்த ஆண்டிற்கான கான் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வான ஐந்து இந்திய திரைப்படங்களை விட எங்களது குறும்படத்தின் பட்ஜெட் குறைவு. சொல்லப்போனால் பட்ஜெட்டே இல்லை, திரைப்பட பயிற்சி நிறுவன மாணவர்கள் என்பதால் ஜீரோ படஜெட்டில் இந்த படத்தை உருவாக்கினோம்.

அது மட்டுமல்லாமல் படத்தின் இயக்குநரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவரும் முறையே எத்தியோப்பியா மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெரிதாக பேச முடியாது. என்னால் அவர்களது மொழியில் பேச முடியாது. ஆனாலும் படத்தின் கதையும் சினிமா எனும் கலையும் இந்த படத்தை உருவாக்க வைத்தது.
சில காட்சிகளில் புரிந்துகொள்ள முடியாமல் கஷ்படப்பட்டேன். ஆனால் அதைத் தாண்டியே இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். 23 நிமிடங்கள் கொண்ட இக்குறும்படத்தை நான்கு நாட்களில் படமாக்கினோம். அதுவும் sync sound முறையில் படம்பிடித்தோம்” என வியப்பு குன்றாமல் படம் குறித்து விவரிக்கிறார் கீதா.
ஜீரோ பட்ஜெட்டில் நடிப்பதற்கு உங்களை கவர்ந்த கதை என்னவென்று கேட்டபோது, ”நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அப்பாவின் நிலத்தை விற்றுவிட்டு இந்தியாவிற்கு வந்து கால்பந்தாட்ட விளையாட்டில் முன்னேற நினைக்கிறார். உள்ளூர் அணிக்காக விளையாடும் அவருக்கு காயமடைந்ததால் விளையாட முடியாமல் போகிறது.
சொந்த நாட்டிற்கும் திரும்ப இயலாமல் வந்த கனவையும் அடைய முடியாமல் இருக்கும் அந்த இளைஞன் தனது முன்னோர்களின் வழியில் தன்னை குணப்படுத்திக் கொள்வதும் அவர்களுடன் இருப்பதற்காக முயற்சிப்பதே இக்குறும்படத்தின் கதை. புலம்பெயர்தல், வறுமை, இதையெல்லாம் விட நிறைய விசயங்களை உளவியல் சார்ந்து பேசியிருப்பதே இக்கதையில் சிறப்பு” என்கிறார் கீதா.

நைஜீரிய இளைஞர் இந்திய நாட்டில் என்ன செய்கிறார், மேலும் எந்தளவிற்கு இந்திய கலாச்சர கூறுகள் இந்த கதையுடன் இணைந்துள்ளன என்ற கேள்விக்கு, “உண்மையில் கொல்கத்தாவில் நிறைய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள். அதனால் உண்மையில் இருந்தே இந்த கதை பிறக்கிறது.
அத்துடன் கொல்கத்தாவிலும் சரி நான் பிறந்த குஜராத்திலும் சரி களிமண்ணில் தான் சாமிகளின் பொம்மைகள் செய்யப்படுகின்றன. இப்படத்திலும் அந்த இளைஞன் முன்னோர்களின் வழியாக களிமண்ணால் செய்யப்படுகிற பொம்மையே பிரதானமாக இருக்கும். இதைவிட அதிகமாக கூற முடியாது. அதற்கு நீங்கள் படத்தை பார்க்க வேண்டும்” என உற்சாகமாக பதிலளித்தார் கீதா.
சுயாதீன திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் வணிக திரைப்படங்களின் வாய்ப்பையும் நிராகரிப்பதில்லை என கூறியதால் இந்த கேள்வி, இரண்டு வகையான திரைப்படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் எவ்வாறாக கையளாப்படுகின்றன?
”வணிக திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கான வெளி என்பது மிகவும் குறுகியதாகவே இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் சுயாதீன திரைப்படங்களில் அப்படி இல்லை. சிறியதாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களைக் கூட நம்மால் விரித்து வேறொரு தளத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
இந்த குறும்படத்தில் கூட கொஞ்ச நேரமே எனது கதாபாத்திரம் வந்து செல்லும். ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. சுயாதீன கலை திரைப்படங்களில் பெண்களுக்கான வெளி பெரிதாகவும் வலுவானதாகவும் உள்ளதாக உணர்கிறேன்” என பதில் கூறினார்.

சுயாதீன திரைப்படங்களின் மீதான காதல் எங்கிருந்து எப்போது தொடங்கியது என கேட்ட போது, “சிறு வயதிலேயே இத்தகைய திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் மிகப்பெரிய ஈடுபாடோ ரசிப்போ இருந்ததில்லை. ஆனால் திரைப்படம் குறித்து தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது சுயாதீன கலைப்படங்களின் வீச்சு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முக்கியமாக சத்யஜித் ரேவின் திரைப்படங்களைக் கூறலாம். அவர் நமது காலத்தை விடவும் 20 ஆண்டுகள் அதிநவீனமான சிந்தனைகளை உடையவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும் அத்தகைய கருத்தாக்கங்களையும் திரைப்பட கூறுகளையும் கொண்டுள்ளவை. அவ்வளவு எளிதில் அவரது தாக்கத்தை புறம்தள்ள முடியாது.
இக்குறும்படத்தின் இயக்குநர் கோகோப் கெப்ரேஹவெரியா (Kokob Gebrehaweria) இயக்கிய முதல் குறும்படத்தில் கூட சத்யஜித் ரேவின் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டேன்” என சத்யஜித் ரே படைப்புகள் மீதான காதலையும் ஒரு சேர பதிலாக கூறினார் கீதா.
சத்யஜித் ரே உருவாக்கிய உயரங்களை உலகளவில் இந்திய திரைப்படங்கள் குறிப்பாக சுயாதீன திரைப்படம் அடைவதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் வேண்டும் என கேட்பதற்கு முன்பே, “பல மாணவர்களும், பலரும் மிகச்சிறந்த கதைகளை வைத்திருக்கிறார்கள். அவர்களால் வணிக திரைப்பட உலகிற்குள் செல்ல முடியாது.
ஏனென்றால் அங்கே செய்யப்படும் செலவும் அதிகம் அதனால் கிடைக்கப்பெறும் வருவாயும் அதிகம். அதனால் அதற்கு உத்ரவாதம் பெறக்கூடிய கதைகளே படங்களாக மாறும். அதே வேளையில் சுயாதீன திரைப்படத்திற்கான தயாரிப்பு செலவும் குறைவு, வருவாய் என்பது கேள்விக்குறிதான். ஆனால் திரைப்படத்தின் மீதான காதலே இத்தகைய திரைப்படங்களை உருவாக்க வைக்கிறது.
எனவே அரசே இத்தகைய திரைப்படங்களை தயாரிப்பதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். இத்தகைய கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உயரங்களை அடைவது கடினம்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: மீண்டும் தனுஷுடன் இணையும் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் யார் தெரியுமா...?
நாடக அரங்கில் இருந்து திரைப்படத்துறைக்கு வருபவர்கள் பெரும்பாலும் சுயாதீன கலைப்படங்களையே தங்களது தேர்வாக கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வணிக திரைப்படத்துறைக்கும் நாடக அரங்கில் இருந்து செல்கிறார்கள். இரண்டும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் நடிப்பதற்கான தயாரிப்பு முயற்சிகளிலும் வேறுபாடு இருக்குமா?
”நாடக அரங்கில் நமது குரல் மூலமாகவே நடிக்க வேண்டும். காரணம் கடைசி இருக்கையில் இருக்கும் பார்வையாளருக்கும் நமது கதை கேட்க வேண்டும், புரிய வேண்டும். அதனால் அங்கே மேடையில் கண்களைவிட முகத்தைவிட குரலும் உடலுமே அதிகம் நடிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் நாடகத்திற்கு ஒரே டேக் தான். ஆனால் திரைப்படம் என வரும்போது நமக்கு தேவையான வரை நடித்துக் கொண்டே இருக்கலாம்.
முக்கியமாக திரைப்படத்தை பொறுத்தவரை கண்களும் முகமும் கைகள் விரல்கள் என நுணுக்கமாக அனைத்தும் நடிக்கக்கூடியதாக இருக்கும். வணிக திரைப்படத்திற்கும் சுயாதீன திரைப்படத்திற்குமான நடிப்பில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படை நடிப்பு என்பது ஒன்று தான். நாடக அரங்கில் அந்த அடிப்படை கிடைத்துவிடும். நான் எடுக்கும் நடிப்பு பயிற்சிகளிலும் இதைக் கூறுகிறேன்” என்றார்.

புலம்பெயர்தல், கலாச்சார வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே இணைதல் போன்ற முக்கியமான விசயங்களைப் பேசியிருக்கக்கூடிய இக்குறும்படத்தின் நடிகையாக உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் புலம்பெயர்தல், கலாச்சார நெருக்கடி நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
சிறிது யோசித்துவிட்டு, “மொழி, கலாச்சரம், மதம் என உலகம் முழுவதும் மனிதர்கள் பிரிந்துள்ளார்கள். நாம் பிறந்ததில் இருந்து இத்தகைய விசயங்களை இன்னொருவர் கூறியே நாம் தெரிந்து வருகிறோம். மாறாக நாமாக இவற்றையெல்லாம் அறிந்துகொள்வதில்லை. முக்கியமாக நாம் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது மொழி, மதம், கலாச்சாரம் பார்த்து உதவி கேட்பதில்லை.
வெறுமனே உதவி மட்டுமே கேட்போம். எதிரில் யாராக இருந்தாலும் உதவ மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கும். அது தான் மனித இயல்பு. அதனை உணராமல் இத்தகைய பிரிவினைகளை சுமந்துகொள்வது என்பது நமக்கு தேவையில்லாத விசயம்” என ஆணித்தரமாக தனது பார்வையை முன்வைத்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.