சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான அட்லி ’ஜவான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் விரும்பப்படும் இயக்குநராக மாறிவிட்டார். ஷாருக்கான் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ’ஜவான்’ திரைப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் படங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஷாருக்கானைத் தொடர்ந்து சல்மான் கானை வைத்து புதிய படத்தை இயக்குகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்த்தின் இமாலய வெற்றிக்குப் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி வந்தன.
இதனை உறுதி செய்யும் விதமாக அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 08) சன் பிக்சர்ஸ் இப்படத்தின் அறிவிப்பு காணொளி ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் பிரம்மாண்டமான இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தற்போது இந்தியாவில் உருவாகி வரும் படங்களிலேயே மிக அதிக பொருட்செலவு கொண்ட படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் இரண்டாவது இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல் அறிவிப்பு வீடியோவும் அமைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், அல்லு அர்ஜுன், அட்லி என அனைவரும் வீடியோவில் தோன்றுகின்றனர்.
வழக்கமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான அறிவிப்பு வீடியோ போன்று ஆரம்பித்து திடீரென அமெரிக்காவிற்கு பறக்கிறது. அட்லியும் அல்லு அர்ஜுன் இப்படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகளுக்காக பல்வேறு ஹாலிவுட் திரையுலக தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேசுவதை வீடியோ மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
’அவெஞ்சர்ஸ்’, ’ஸ்பைடர் மேன்’, ’ட்ரான்ஸ்ஃபர்மர்ஸ்’ என பிரபலமான பல்வேறு ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த விஎஃப்எக்ஸ், கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் கதை, திரைக்கதை பற்றியும் அவை உருவாக்கியுள்ள உலக்ததைப் பற்றியும் வியந்து பேசுகிறார்கள். இவற்றில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.
மேலும் ஹாலிவுட்டில் வெளியான ’அவதார்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட 3D மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தையும் (3D motion capture technology) அட்லி பரிசோதித்து பார்க்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ’அவதார்’ திரைப்படம் உருவான 3D motion capture technology போன்ற தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் உருவாகலாம் என தெரிகிறது.
மேலும் வழக்கமான படமாக இல்லாமல் பேரலல் யூனிவர்ஸ் எனப்படும் மாற்று உலகத்தில் நடக்கும் கதையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படியான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் பட பாடலை பாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்!
இந்த அறிவிப்பில் பட தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் அட்லி, அல்லு அர்ஜுன் தவிர வேறு எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை. இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக ’கட்சி சேர’, ’ஆசை கூட’ போன்ற சுயாதீன பாடல்களை உருவாக்கிய சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.