மயிலாடுதுறை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) இன்று (ஏப்ரல்.10) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கான கொண்டாட்டம் அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது. திரையரங்குகளிலும் இணையத்திலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் நேற்று இரவே பீரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே படத்தின் வெளியீட்டிற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமே ’குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டு கொண்டாட்டத்தை அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில் "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து விஜயா திரையரங்கத்திற்கு 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
இதையும் படிங்க: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்திற்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!
அப்போது கைகளில் அஜித்தின் உருவப்படங்களை வைத்து அஜித் குறித்த கோஷங்களை எழுப்பி வந்தனர். ’கடவுளே அஜித்தே’ என கோஷம் பிரதானமாக எழுப்பப்பட்டது. உற்சாக கொண்டாட்டங்களுடன் இருசக்கர வாகன ஊர்வலத்துடன் திரையரங்கிற்கு வந்தனர்.
தொடர்ந்து திரையரங்கம் முன்பு வைத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், 50 அடி உயர நடிகர் அஜித்குமார் பேனருக்கு மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து காலை முதலே திரையரங்க வளாகத்தில் நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். இந்த கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் கையில் பட்டாசை கொளுத்தி சுழற்றியபடி இருந்தார். சாகசம் நிகழ்த்துவதாக கருதி ஆபத்தை உணராமல் செய்த நிகழ்வு அச்சத்தை ஏற்படுத்தியது. 50 அடி உயர அஜித் பேனர் மீதும் ஆபத்தை உணராமல் மே ஏறி பாலபிஷகம் செய்தனர் ரசிகர்கள்.