சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly). திரையரங்குகளில் வெளியானது முதல் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை எட்டியுள்ளது ’குட் பேட் அக்லி’.
’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைகிறார் என்ற அறிவிப்பே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஆரம்பம் முதலே ஏற்படுத்தியது. படம் வெளியான முதல் காட்சியில் இருந்து அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தில் கதை, திரைக்கதை என எதுவும் இல்லை என கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் 'குட் பேட் அக்லி' வசூலில் எந்த குறையும் இல்லாமல் திரையரங்குகளில் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க மாஸ் கமரஷியல் படத்தில் நடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பழைய பட வசனங்கள் காட்சிகள் என ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கிய கொண்டாட்டமாக உள்ளதாகவும் உற்சாகம் நிறைந்த அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது எனவும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#GoodBadUgly becomes the HIGHEST OPENER FOR AK IN TAMIL NADU 💥💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 11, 2025
GBU collects a gross of 30.9 CRORES on Day 1 in Tamil Nadu - BLOCKBUSTER SAMBAVAM ❤️🔥
Book your tickets now!
🎟️ https://t.co/jRftZ6uRU5#BlockbusterGBU#AjithKumar #AdhikRavichandran #GoodBadUgly… pic.twitter.com/Q5OVrVfqlY
'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் நாள் வசூலானது தமிழ்நாட்டில் மட்டும் 30.9 கோடி வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில்தான், 2025ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.
சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, 'குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்திய அளவில் படம் வெளியான முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது. உலகளவில் 170 கோடி ரூபாயை கடந்துள்ளது படத்தின் வசூல். விரைவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனைப் புகழ்ந்த சிவகார்த்திகேயன்... ‘மறக்க முடியாத நினைவு’ என நெகிழ்ச்சி பதிவு!
இந்த வசூலின் மூலம் 2025-ம் ஆண்டில் இதுவரை ரிலீஸான தமிழ்ப் படங்களிலேயே ‘வசூலில் முதல் இடம்’ என்ற சாதனையை உறுதி செய்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. முன்னதாக வெளியான ‘விடாமுயற்சி’ ஒட்டுமொத்தமாக 136 கோடி ரூபாய் வசூ; ஈட்டியிருந்தது.
அதற்கு முன்பாக பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படமானது 152 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 5 நாட்களில் இந்த சாதனைகளை தாண்டியுளளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே குட் பேட் அக்லி தான் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் மாறும் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.