சென்னை: இரண்டு மாத இடைவெளிக்குள் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கான கொண்டாட்டம் அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது. திரையரங்குகளிலும் இணையத்திலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் நேற்று இரவே பீரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே படத்தின் வெளியீட்டிற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'விடாமுயற்சி’ திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அஜித் திரைப்படம் என்பதால் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்குள் இரண்டு மாத இடைவெளிக்குள்ளாகவே குட் பேட் அக்லி வெளியாகியுள்ளது. இதனையும் கொண்ட்டாட்டத்திற்கு குறைவில்லாமல் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
தமிழ்நாடு முழுவதுமே ’குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டு கொண்டாட்டத்தை அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேளங்களுடன் ஆடி மகிழ்கின்றனர். மகிழ்ச்சியுடன் கோஷங்களை எழுப்புகின்றனர். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். சென்னையில் ரோகிணி தியேட்டரில் ஆட்கள் நிற்க முடியாத அளவிற்கு அஜித் ரசிகர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர்.
பெரிய நடிகர்களின் படம் என்றாலே முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் அதிகமாக கூடுவது வழக்கம். அஜித் ரசிகர்களும் ஆடி, பாடி கடவுளே அஜித்தே என கோஷமிட்டு மகிழ்ந்தனர். திரையரங்குகளில் பட்டாசு வெடிப்பதற்கு கட் அவுட் மேலே ஏறி பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதி கொடுக்கவில்லை.
அதனால் ரசிகர்கள் கீழே இருந்தபடியே பால் பாக்கெட்டிலிருந்து கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ரசிகர்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகளில் ஒன்றாக இருப்பதால் மிகுந்த கட்டுப்பாடுகளுடனே கொண்டாட்டங்கள் நடைபெற்றன. எந்தவித அசம்பாதவிதமும் நிகழாமல் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து திங்கள்கிழமை வரை விடுமுறை என்பதால் முதல் நாள் வசூல் பெரிதாக இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து தங்கள் எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஆக்ஷன் சம்பவம்... எப்படி இருக்கிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’?
ஒரு ரசிகர், “‘விடாமுயற்சி’ திரைப்படம் கொஞ்சம் மெடுவாக இருந்தது. இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என கூறி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அஜித் உடல் எடையை குறைத்து இளமையாக தோன்றியுள்ள தோற்றம் சிறப்பாக இருக்கிறது.
மேலும் ஜிவி பிரகாஷின் இசை நன்றாக உள்ளது. கடைசி படமான விடாமுயற்சியை விட நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என கூறுகிறேன்.
இன்னொரு ரசிகர், “விடாமுயற்சி திரைப்படம் சிறப்பாக இருந்தது. ஆனால் அதே மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடுவதற்கான படமாக இருக்கும். ஆனால் விடாமுயற்சி சிறப்பாக இருந்தது. குட் பேட் அக்லி ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்